சென்னை: திருநெல்வேலி மாவட்டம், பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (23) என்பவரும், பாளையங்கோட்டையைச் சேர்ந்த மதன் குமார் (28) என்பவரும் அண்மையில் திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், கட்சி அலுவலக கண்ணாடி, நாற்காலிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கலப்பு திருமணம் செய்த பெண் உதய தாட்சாயினி சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனது கணவர் பட்டியலில் இன வகுப்பைச் சார்ந்தவர். எங்கள் திருமணத்திற்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, திருநெல்வேலி மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்னை அடைத்து வைத்து துன்புறுத்தலில் ஈடுபட்டார்.
பின்னர், அங்கிருந்து தப்பித்து திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பிற்காக அடைக்கலம் புகுந்தேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை உடைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
நானும், எனது கணவரும் அமைதியாக வாழ்வதற்கும், எந்த விதமான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருப்பதற்கும் காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக காவல்துறை தலைவரிடம் கடந்த ஜூன் 25ஆம் தேதி மனு அளித்துள்ளதாகவும், அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.