தூத்துக்குடி: தமிகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
இந்த நிலையில், உமரிக்காடு பகுதியைச் சேர்ந்த 35 வயதான எம்.டெக், எம்.பி.ஏ பட்டதாரியான சிவனேஸ்வரன், சுயேட்சை வேட்பாளராக, மனுவை இன்று தாக்கல் செய்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதியிடம் மனுவை அளித்த இவர், சென்னையில் உள்ள தனியார் உணவு நிறுவனத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
மூன்றாவது முறையாக, யாருடைய உதவியும் இல்லாமல் தனித்து களம் காணும் சிவனேஸ்வரன், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், உமரிக்காடு பகுதியைச் சேர்ந்த நான், மூன்றாவது முறையாக தேர்தலில் நிற்கிறேன். முதல் முறையாக 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் நின்று 5 ஆயிரத்து 252 ஓட்டு வாங்கினேன்.
அதன்பின், இரண்டாவது முறையாக தூத்துக்குடி சட்டமன்றத் தேர்தலில் நின்று 2 ஆயிரத்து 861 ஓட்டு வாங்கியுள்ளேன். 3வது முறையாக மீண்டும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளேன். அரசியலில் நிற்பதற்கு காரணம், படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற முக்கியமான நோக்கம் தான்.
இதையும் படிங்க: "வாக்குகள் குறைந்தால் நடவடிக்கை தான்!" மா.செ.க்களை எச்சரித்த மு.க.ஸ்டாலின்
மக்கள் மத்தியில் பணம் இருப்பவர்கள் மற்றும் அரசியல் பின்புலம் இருப்பவர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற தப்பான அபிப்ராயம் இருக்கிறது. அதனை உடைத்து சாதாரண நடுத்தரத்தினரும் அரசியலுக்கு வந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற காரணத்தினால் தான் போட்டியிடுகிறேன். நானும் மாதச் சம்பளம் பெறுபவன் தான், அதைத்தான் தேர்தலுக்கு செலவு செய்ய உள்ளேன்” என்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர், “ வெற்றி பெற்றால் மக்களோடு மக்களாக நான் இருப்பேன். அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் நிறைய கேப் உள்ளது. சாதாரண மக்களால் அரசியல்வாதிகளை பார்க்க முடியவில்லை. அதனை மாற்றி, மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்து, மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவேன்” என்றார்.
இதையும் படிங்க: 6 முறை எம்பியாக இருந்த பழனிமாணிக்கத்திற்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்? யார் இந்த முரசொலி?