தூத்துக்குடி: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் அனைவரும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, நேற்று (ஏப்.10) கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு விஜயாபுரி ஊராட்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, "இந்த தேர்தலில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆளக்கூடிய பாஜக அரசு தொடர்ந்து பெண்களை இழிவு செய்யக்கூடிய, பெண்களுக்கு எதிரான கருத்துக்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் அவர்களின் அடிப்படை கொள்கையாக இருக்கிறது. ஆனால், நாங்கள் தான் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம் என்று சொல்வார்கள்.
இட ஒதுக்கீடு என்றால், நமக்கு உள்ளாட்சித் தேர்தலில் தற்போது பெண்களுக்கு 50 சதவீதம் உள்ளது. பாஜக நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கீடு எடுத்த பிறகு, தொகுதியைச் சீரமைத்து, பின்னர் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வரும் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த கணக்கெடுப்பை ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படி ஆரம்பிப்பார்கள், எப்போது ஆரம்பிப்பார்கள் என்று தெரியாது. அதற்கு 10 வருஷம், 20 வருஷம், 30 வருஷம் கூட ஆகலாம், அது யாருக்கும் தெரியாது.
ஆனால், சட்டம் மட்டும் வெறும் பேருக்கு என கொண்டு வந்துள்ளனர். பெண் சக்தி என்று பிரதமர் பேசுவார், பாஜகவில் இருக்கக்கூடிய 44 எம்பிக்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்தவர்கள். அவர்களின் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீராங்கனைகள், அவர்களோடு பிரிஜ் பூஷண் எம்.பி தவறாக நடந்து கொண்டதாக வீராங்கனை போராடினார்கள். ஆனால், நடவடிக்கை எடுத்தது அந்த பெண் வீராங்கனைகள் மீது. ஆனால், அந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மேல் பிரதமர், பாஜக அரசு எந்த கேள்வியும் கேட்கவில்லை.
மணிப்பூரில் எத்தனை பெண்களுடைய சுயமரியாதை அங்கே கேள்விக்குறியானது? எத்தனை பெண்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். ஒரு நாளாவது பிரதமர் மோடி அங்கே போய், அந்த பெண்களிடம் நான் இருக்கிறேன், உங்களுக்கு பாதுகாப்பாக என்று சொல்லி இருக்கிறாரா, இல்லை. சாமானிய மக்களுக்கு இந்த பாஜக அரசாங்கம் எதுவும் செய்யாது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் உழைக்கக்கூடிய ஒரு ஆட்சி.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தான் கடன் ரத்து. ஆனால், நமக்கு கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லையென, அதுக்கு பணம் பிடித்தம் செய்கிறார்கள். கேஸ் சிலிண்டர் விலை மோடி ஆட்சிக்கு வந்த போது ரூ.410, தற்போது ஆயிரத்துக்கு மேல் சென்றுள்ளது, மானியமும் வரவில்லை. 100 நாள் வேலை திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஒன்றித்திருந்தபோது கொண்டு வரப்பட்ட திட்டம். ஆனால், பாஜக ஆட்சியில் இதற்கான நிதியைக் குறைத்துவிட்டனர்.
இந்தியா முழுவதும் யாருக்கும் 100 நாள் வேலை கிடையாது. 25 நாள் வேலை கிடைத்தால் பெரிய விஷயமாக உள்ளது. வேலை செய்த நாட்களுக்கும் சம்பளம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் முதலமைச்சர் தெரிவித்தபடி, 1 கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. சில பேருக்கு விடுபட்டுப் போயிருக்கலாம், இந்த தேர்தல் முடிந்தவுடன் விடுபட்டவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். காலை உணவுத் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியது திமுகதான்.
நமது ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன், கேஸ் சிலிண்டர் 500 ரூபாய், பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும். அதேபோல, 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். அதற்கு சம்பளம் ரூ.400 வழங்கப்படும். கல்விக்கடனும், விவசாயக் கடனும் ரத்து செய்யப்படும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் தருவோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
வரக்கூடிய தேர்தலில் உங்களுக்காக பணியாற்றக்கூடிய வாய்ப்பை மீண்டும் எனக்கு அளிக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். தூத்துக்குடி எனது 2ஆம் தாய் வீடு என்று சொல்லக்கூடிய அளவிலே, உங்களுடைய அன்பைப் பெற்று இருக்கிறேன். அந்த நம்பிக்கையின் பேரில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.