தேனி: மாவட்டம், அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 11 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தும், நடந்தவற்றை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக பாதிக்கப்பட்ட சிறுமி தன் பெற்றோரிடம் கூறி , பெற்றோர் தேனி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
மேலும், அந்த புகாரின் அடிப்படையில் கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை அறிக்கை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இன்று முடிந்த நிலையில், சாட்சியங்களின் அடிப்படையில் கண்ணன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வீட்டுக்குள் திடீரென வந்த கணவன்.. மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்..! ராணிப்பேட்டை ஷாக்
தண்டனை விவரம்: அதில், குற்றவாளிக்கு இந்திய தண்டனைச் சட்டம் 366, 506(i) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை..
போக்சோ சட்டம் 6 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை..
போக்சோ சட்டம் 10ன் கீழ் மேலும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதம் அதைக் கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை என மூன்று பிரிவுகளில் சிறை தண்டனையும் மற்றும் அபராதம் விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்