திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்தவர் அழகு (42). இவர் அமிர்தசரஸில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்கள் சமூகரெங்கபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 5) பெற்றோர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டை உடைத்து, வீட்டில் உள்ள துப்பாக்கி மற்றும் அதற்குண்டான 25 தோட்டாக்களையும் திருடிச் சென்றுள்ளனர். அழகு, தற்போது எல்லை பாதுகாப்புப் படை பிரிவில், ‘போட்’ என்ற பிரிவின் கீழ் அமிர்தசரத்தில் பணியாற்றி வருகிறார். இவர், 2010-ஆம் ஆண்டு ஸ்ரீ நகரில் துப்பாக்கி வாங்குவதற்கான உரிமம் பெற்றுள்ளார்.
அதன்பின், 2019-ஆம் ஆண்டு மதுரையில் பெருமாள் சாமி என்பவரிடம் ‘32 பிஸ்டல்’ வகை துப்பாக்கியையும், அதற்குரிய 30 தோட்டாக்களையும் அவர் வாங்கி உள்ளார். இதில் அவர் சோதனை செய்வதற்காக 5 தோட்டாக்களை பயன்படுத்தி உள்ளார். எஞ்சிய 25 தோட்டாக்களும் அவர் தன்வசம் வைத்திருந்தார்.
அந்த துப்பாக்கியை தான் பணியாற்றும் இடங்களில் வைத்திருந்த அவர், அக்டோபர் 9-ஆம் தேதி விடுமுறைக்காக ஊருக்கு வந்துவிட்டு நவம்பர் 9ஆம் தேதி விடுமுறை காலம் முடிந்து பணிக்காக அமிர்தசரஸ் சென்றுள்ளார். அப்போது, சமூகரெங்கபுரத்தில் குடியிருந்து வரும் அவரது பெற்றோர்களிடம், ‘இது முக்கியமான பொருள்’ என துப்பாக்கி, தோட்டாக்கள், ஒரு கத்தியை ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க |
இந்த நிலையில், நேற்று பெற்றோர்கள் தங்கியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல், அங்கிருந்த பொருள்களைத் திருடியுள்ளது. மேலும், அருகில் இருந்த வீட்டை உடைக்க முற்பட்டு அது தோல்வியில் முடியவே, ராணுவ வீரரின் தாய் வீட்டின் பூட்டை உடைத்துள்ளதாக ராதாபுரம் காவல்துறை நமக்கு தகவல் அளித்துள்ளது.
ஆனால், அங்கு எதுவும் இல்லாததால், பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு கத்தி, துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் அழகுக்கு தகவல் கொடுக்கவும், அவர் உடனடியாக அமிர்தசரத்தில் இருந்து புறப்பட்டு இன்று ராதாபுரம் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் கொடுத்துள்ளார். சம்பவம் குறித்து ராதாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், செய்தியாளர்களிடம் பேசிய அழகுவின் அம்மா, இதே தெருவில் ஒரு பெண்மணியின் வாயில் துணியை கட்டி நகை கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறினார். எனவே, இந்த தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.