சென்னை: தென் சென்னையின் நாடாளுமன்ற வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு வட சென்னை தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருத்து கணிப்புகளின் படி பிரதமர் மோடி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி புரிவார்.
தமிழகத்திற்கு வந்த பிரதமர் தியானம் செய்து தமிழகம் ஆன்மீக பூமி என்பதை நிருபித்துள்ளார். மேலும், பிரதமர் குறித்த சமூக வலைதள மீம்ஸ்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், யாராக இருந்தாலும் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நாகரீகமாக பதிவிட வேண்டும்.
முதல்வர் வீட்டிலேயே கரண்ட் கட்?: தன்னைப் பற்றி போஸ்டர் ஒட்டினாலும் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்கிறார். ஆனால், பிரதமர் தன்னை குறித்த மீம்ஸ்களை தானே பகிர்ந்து ரசிக்கிறார் எனக் கூறினார். மேலும், தனது வீட்டிலேயே கரண்ட் கட் ஆன நிலையில் மின்மிகை மாநிலம் என தமிழக அரசு கூறுவதாக விமர்சித்தார்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி வாய்ப்பு குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், திமுகவிற்கு கிடைக்கின்ற வெற்றி கூட அவர்கள் செய்த நல்ல ஆட்சிக்காக எல்லாம் இருக்காது எனவும், அதிகப்படியான கூட்டணி கட்சிகள் உடன் இணைந்து இருப்பதாலேயே அந்த வாக்குகள் சிதறாமல் இருப்பதாலேயே அவர்களுக்கு அந்த இடங்கள் கிடைக்கும் எனவும் கூறினார்.
தமிழகத்தில் தாமரை மலராது என்று கூறிய தொல் திருமாவளவனின் கருத்திற்கு, திருமாவளவன் கனவு காண்கிறார். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றார். பின்னர், கோயிலின் வாசலில் பாஜக தொண்டர்கள் சூழ தமிழிசை தனது பிறந்த நாளையொட்டி, கேக் வெட்டும்போது தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து ஆங்கிலத்தில் பாடவே, தமிழிலேயே பாடுங்கப்பா என அறிவுறுத்தி கேக் வெட்டினார்.
கருத்து கணிப்புகள் சொல்வதுஎன்ன?: இந்தியா நியூஸ் - டி டைனமிக்ஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகள் முடிவுகளின் படி, 'பாஜக கூட்டணி 371 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 125 இடங்களிலும் பிறக் கட்சிகள் 47 தொகுதிகளிலும் வெற்றி பெறும்' எனவும், டி5 தெலுங்கு செய்தி நிறுவனம் நடத்திய தேர்தல் முடிவு கருத்து கணிப்புகளில், பாஜக கூட்டணி 359 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 154 இடங்களிலும், பிறக் கட்சிகள் 30 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஜன் கி பாத் செய்தி நிறுவனத்தின் கருத்து கணிப்பில், 'பாஜக கூட்டணி 362 முதல் 392 வரை மக்களவை தொகுதிகளை கைப்பற்றும்' எனவும், காங்கிரஸ் கூட்டணி 141 முதல் 161 இடங்களையும், பிறக் கட்சிகள் 10 முதல் 20 இடங்களையும் கைப்பற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் சரண்! மீண்டும் பொறுப்பேற்ற சுனிதா கெஜ்ரிவால்! - Arvind Kejriwal Surrendered