தஞ்சாவூர்: இன்று இந்தியாவின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில், கரும்பு விவசாயிகள் கையில் கரும்பு மற்றும் தேசியக் கொடியுடன் முருகனின் நான்காம் படை வீடான கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் கீழ சன்னதியில் உள்ள வல்லப கணபதியிடம் வேண்டுதலை நூதன முறையில் மனுவாக எழுதி வைத்து சமர்பித்தனர்.
கரும்பு விவசாயிகள் சுவாமிநாதசுவாமி கோயில் முன்பு பெருந்திரள் கூடி, சுவாமிநாத சுவாமி தான் எங்களைக் காப்பாற்றனும் என முழக்கங்கள் எழுப்பி, சூடம் ஏற்றி வைத்து, சிதறு தேங்காய் உடைத்து, சில நிமிடங்கள் ஆக்ரோஷமாக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் அங்கிருந்து பாதயாத்திரையாக, கையில் வைத்திருந்த கரும்பு மற்றும் தேசியக் கொடியுடன் 6 கி.மீ தூரத்தில் உள்ள திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்புள்ள போராட்ட பந்தலை நோக்கி புறப்பட்டனர். இந்த நூதனப் போராட்டத்தை முன்னிட்டு, சுவாமிமலை காவல் ஆய்வாளர் மலைச்சாமி தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் செயலாளர் காசிநாதன் கூறுகையில், “எங்களுக்கு வழங்க வேண்டிய 212 கோடி ரூபாயை இன்றுடன் 625 நாளாக தமிழக அரசிடம் கேட்டு வருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.
முதலமைச்சர் பேட்டியில் மட்டும் விவாசாயிகளுக்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கூறுவது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. அதனால் சுதந்திர நாளான இன்று எங்கள் போராட்டத்தை கோயிலிருந்து தொடங்கி நடத்தி வருகிறோம். முதல்வர் நினைத்தால் இந்த பிரச்னையை ஒரேநாளில் முடித்து வைக்க முடியும். ஆனால், ஏன் இதுகுறித்து அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என தெரியவில்லை” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் முருகேசன் கூறுகையில், “இந்த சுதந்திர தினத்திலாவது அரசு எங்களின் கோரிக்கையை ஏற்று எங்களுக்கான பணத்தை தர வேண்டும் என்று நாங்கள் எங்களை வருத்திக் கொண்டு தேசியக் கொடியுடனும், கரும்புடனும் முருகன் அருளோடு போராட்டத்தில் இறங்கியுள்ளோம்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம்! முக்கிய வலியுறுத்தல்கள் என்ன?