தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் மேயர் இராமநாதன் தலைமையில் இன்று (பிப்.29) நடைபெற்றது. இதில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், தஞ்சாவூர் மாநகராட்சியின் 2024-2025ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வெளியிடப்பட்டது.
இந்த பட்ஜெட்டை மேயர் இராமநாதன் வெளியிட, ஆணையர் மகேஸ்வரி பெற்றுக் கொண்டதையடுத்து, தஞ்சாவூர் மாநகராட்சியில் வரவினங்களாக ரூ.344 கோடி வருவாய் மற்றும் ரூ.324 கோடி செலவினம் மூலம், ரூ.20 கோடி உபரி பட்ஜெட் உள்ளதாக அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர் மணிகண்டன் பேசுகையில், அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ரூ.20 கோடி உபரி பட்ஜெட் வந்துள்ளதாகவும், அதை வரவேற்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநகராட்சி வார்டு பகுதிகளில் கடந்த மூன்று மாத காலமாக அடிப்படை வசதிகள், சுகாதாரப்பணி ஆகியவை செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள வார்டு குறைகளை மன்றக் கூட்டத்தில் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.