சென்னை: தமிழ்நாடு முழுவதும் தற்போது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ளூர் மதுபான ஆலைகளில் தயாரிக்கப்படும் பீர், விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மதுபான வகைகளும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மது பானங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதன் அடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
ஆகவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்களின் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில், 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி., 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: இடிந்து விழும் நிலையில் நீர்தேக்கத் தொட்டி! திக் திக் என வாழும் கிராம மக்கள்! அரசு நடவடிக்கை எடுக்குமா?