மதுரை: மதுரையின் பாரம்பரிய அடையாளமான பாண்டிய மன்னர்களின் மீன் சின்னத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், மூன்று மீன்கள் நீரூற்றில் துள்ளி விளையாடுவது போன்ற வெண்கலத்தினாலான சிலை, மதுரை ரயில் சந்திப்பு கிழக்கு நுழைவாயில் முன்பாக கடந்த 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முயற்சியால், ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு நிறுவப்பட்டது.
இவை கடந்த 2018 ஆம் ஆண்டு ரயில்வே விரிவாக்க பணிகளின் காரணமாக, அப்பகுதியில் மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதியாக அம்மீன் சிலை அகற்றப்பட்டது. அதனை மீண்டும் நிறுவக்கோரி பல்வேறு தரப்பிலிருந்தும் மதுரை ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் வந்தவண்ணம் இருந்தன. மதுரை தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அகற்றப்பட்ட அந்த மீன் சிலை தற்போது ரயில்வே வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், மீன் சிலையை அதே இடத்தில் அமைக்க கோரி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கில், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் அடையாளமாக மக்கள் மீன் சிலையைப் பார்க்கின்றனர். இதனால் மதுரையில் மாநகராட்சி எல்லைக்குள் முக்கிய சந்திப்பு அல்லது முக்கிய இடத்தில் மீன் சிலை அமைக்க வேண்டும். மேலும், மீன் சிலை அமைக்க தகுதியான இடத்தைத் தேர்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
மீன் சிலை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இத்தனை நாட்கள் கடந்த நிலையில், தற்போது வரை மீன் சிலை அமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், மீன் சிலை அமைக்கப்படாததை கண்டித்து, தமிழர் கட்சி பொதுச் செயலாளர் (வழக்கறிஞர்) தீரன் திருமுருகன் தலைமையிலான குழுவினர், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில்,100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்டனர். அப்போராட்டத்தில், பாண்டிய மன்னன் செங்கோலுடன் இருப்பது போன்று வேடம் அணிந்த இளைஞர் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். போராட்டத்தில், அப்பகுதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போராட்டட்டக் குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர். அவர்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர் தீரன் திருமுருகன், “பாண்டிய மன்னர்களின் அடையாளமாக ரயில் நிலையம் முன்பு இருந்த சிலை விரைவில் அமைக்கப்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவையும் மீறி தற்போது வரை சிலை அமைக்காமல் அரசு மெத்தனப்போக்கு காட்டுகிறது. மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார். வரும் நாட்களில் முன்னறிவிப்பின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு சிறை செல்லவும் நாங்கள் தயார்” என்று அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சட்டக்கல்லூரி மாணவர்களிடம் நன்கொடை வசூலிப்பது ஏன்? பார் கவுன்சில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!