சென்னை: புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென மாயமான நிலையில், நேற்று அவரது வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் போலீசார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என புதுச்சேரியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இந்த சம்பவத்தில் புதுச்சேரி அரசு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு பொது பிரச்சினைக்கு தவெக தரப்பில் இருந்து வரும் முதல் அறிக்கை இதுவாகும்.
இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி கொலை; நாளை மறுநாள் அதிமுக போராட்டம் அறிவிப்பு!