சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவராக இருந்தவர் த.வெள்ளையன் (76). இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், வணிகர் சங்கத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வந்தார்.
இந்நிலையில் இவருர்ரு திடீரென்று நுரையீரல் தொற்று ஏற்படவே சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக மருத்துவமனையில் இருந்து பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் பெரம்பூர் வியாபாரிகள் நல சங்க தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பிரபல நடிகர் குடும்பத்துடன் சென்ற கார் விபத்து.. ஆத்திரத்தில் தகாத வார்த்தை; தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஜீவா! - jeeva car accident
மேலும், இவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெரம்பூர் பகுதியில் அனைத்து கடைகளும் இன்று ஒருநாள் மட்டும் அடைக்கப்பட்டன. மேலும், அவரது உடல் வைக்கப்பட்டுள்ள பெரம்பூர் பாரதி சாலை முழுவதும் போலீசார் அதிக அளவு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகிகள் நேரில் வந்து இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் சென்னையில் வைக்கப்பட்டிருந்த த.வெள்ளையன் உடல் சொந்த ஊரான திருச்செந்தூரை அடுத்த பிச்சிவிளை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்ய இன்று எடுத்து செல்லப்பட்டது.