சென்னை: தமிழகத்தின் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் இர்பான். இவர் தனது யூடியூப் சேனல்களில் உணவு தொடர்பான வீடியோ பதிவிட்டு வந்த நிலையில் தற்போது தனது திருமணம், வீட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் துபாய் சென்றபோது, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவமனையில் சோதித்து, அதனையும் யூடியூபில் வீடியோவாக வெளியிட்டார். இந்த விவகாரத்தில் மருத்துவத்துறை விளக்கம் கேட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார் இர்பான். இதனால் அவர் மீதான நடவடிக்கையை மருத்துவத்துறை கைவிட்டது. இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்று குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்து, குழந்தையின் தொப்புள் கொடியையும் தானே வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது .அரசு பதிவு பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அரங்குக்குள் செல்ல வேண்டும். மேலும் கத்தரிக்கோல் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவர்கள் மட்டுமே கையாள வேண்டும். ஆனால் குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டியது சட்டப்படி தவறு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தனியார் வங்கியில் அடகு வைத்த தங்க நகையை மாற்றி வைத்து மோசடி.. வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது!
இது குறித்து ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் ராஜமூர்த்தியிடம் கேட்டப்போது, "குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை யூடியூபில் இர்பான் வெளியிட்டு இருக்கும் நிலையில் இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்படும்.
அதற்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்க உள்ளோம். சுகப்பிரசவத்தின் போது மனைவியுடன் கணவர் உடன் இருக்கலாம். ஆனால் ஆப்ரேஷன் தியேட்டரில் மருத்துவர் மற்றும் பணியாளர்களை தவிர யாரும் உள்ளே செல்லக்கூடாது.
சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மருத்துவமனையில் பிரசவத்தின் போது வீடியோ எடுக்கவும், தொப்புள் கொடியை கட் செய்யவும் பணியில் இருந்த மருத்துவர்கள் எப்படி அனுமதித்தனர் எனவும் அவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இர்பான் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுத உள்ளோம் தெரிவித்தார்.