சென்னை: சட்டப்பேரவையில் அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், துறைகள் வாரிகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் சம்பந்தப்பட்ட துறைகளின் திட்டங்களுக்கு கோரப்பட்ட நிதி பேரவையின் ஒப்புதலுடன் விடுவிக்கப்படுவது நடைமுறை. ஆனால் இந்த ஆண்டு பேரவையின் முதல் கூட்டம் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது, இதனை தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது, பிப்ரவரி 15 ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்தினார்.
தொடர்ந்து பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழக அரசின் 2024-2025 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பிப்ரவரி 20-ஆம் தேதி தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, நிதி நிலை அறிக்கைகள் மீதான விவாதம் கடந்த பிப்ரவரி 22 ம் தேதி வரை நடத்தப்பட்டது. அன்றைய தினம் இரு அமைச்சர்களும் பதிலுரை அளித்ததும், பேரவை அடுத்ததாக கூடும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, துறைகள் தோறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட வேண்டிய நிலையில், மக்களவை தேர்தல் அறிவிப்பை எதிர்நோக்கி மானிய கோரிக்கை மீதான விவாதம் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் தமிழக சட்ட பேரவை இன்று கூடுகிறது, மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவை ஒத்திவைக்கபட உள்ளது, இதனை தொடர்ந்து நாளை துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி 9 நாட்களுக்கு நடைபெற உள்ளது காலை 9.30 மணிக்கு தொடங்கும் பேரவை கூட்டம் காலை மாலை என இரு வேளையும் நடந்தபட்டு அனைத்து துறைகளுக்குமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில், காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு, ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்கட்சிகள் குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 33 ஆக உயர்வு.. 20 பேருக்கு தீவிர சிகிச்சை!