சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேர் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர்.
3302 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வினை கண்காணிக்கும் பணியில் 43 ஆயிரத்து 200 ஆசிரியர்களும் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை மாவட்டத்தில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 62 ஆயிரத்து 124 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வினை எழுதி உள்ளனர்.
இவர்களின் விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் பெறப்பட்டு தற்போது விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளும் ஆசியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை அரசு தேர்வுத்துறை பாதுகாப்பான முறையில் பெற்று, அதனை விடைத்தாள் திருத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள 86 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து முதன்மை விடைத்தாள் திருத்துபவர்கள் (பணியில் அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள்) இன்று(ஏப்.01) அரசுத் தேர்வுத்துறையால் அளிக்கப்படும் விடைத்தாள் குறிப்புகளை வைத்து திருத்தும் பணியை மேற்கொள்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியினை செய்கின்றனர். இந்தப் பணியில் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். அதன் பின்னர் மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, மே.6ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர்கள் கவனத்திற்கு:
- விடைத்தாள் திருத்தும் பணியில் நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மேல்நிலைக் கல்வி பாடங்களைப் போதித்தவராக இருத்தல் வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களை மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
- உதவித் தேர்வாளர்கள் நியமனத்தில் முகாம் அலுவலர்கள் கவனம் செலுத்தாத காரணத்தினால் முந்தைய ஆண்டுகளில் மறுமதிப்பீடு, மறுகூட்டலின்போது உயர்நீதி மன்றத்தில் அதிக வழக்குகளைத் தேர்வுத்துறை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. எனவே தகுதி வாய்ந்த அனைத்து ஆசிரியர்களையும் மதிப்பீட்டுப் பணிக்கு ஈடுபடுத்த வேண்டும்.
- மெட்ரிக் பள்ளிகளைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களைப் போதிக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர்களையும் அந்தந்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தல் வேண்டும்.
- விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் போது ஆங்கில வழி போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி பாட விடைத்தாள்களை மதிப்பீடு செய்யக்கூடாது என்றும், தமிழ் வழி போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி பாட விடைத்தார்களை மதிப்பீடு செய்யக்கூடாது.
- உதவித் தேர்வாளரைக் கொண்டு முழுமையாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்து தரும் முழுப்பொறுப்பும் முதன்மைத் தேர்வாளருக்கே உரியதாகும்.விடை திருத்தும் அறையில் செல்போன் எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. இது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- குழுவில் பேசிக்கொண்டே இருப்பது, அடிக்கடி வெளியில் சென்று வருவது, காலதாமதமாக வருவது ஆகிய செயல்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
- விடைத்தாள் மதிப்பீட்டு பணி துவங்கும் நாளன்று பாடவாரியான கட்டுக்களை முதன்மைத் தேர்வாளர்களுக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உதவித்தேர்வாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முகாம் அலுவலர்கள் வழங்க வேண்டும்.
- மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படும் கணினி அறையில் அலைபேசியில் பேசுவதை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் முகாம் அலுவலர் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சமோசா முதல் சிக்கன் பிரியாணி வரை.. வேட்பாளர் எவ்வளவு செலவு செய்யலாம்? - தேர்தல் ஆணையத்தின் விலை பட்டியல் கூறுவது என்ன?