கிருஷ்ணகிரி: ஓசூரில் 800 ஆண்டுகள் பழமையான மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஷ்வரர் கோயில் தேர் திருவிழா இன்று (மார்ச் 25) நடைபெற்றது. ஓசூர் மலைக்கோயில் என்றழைக்கப்படும் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஷ்வரர் கோயில் தேர் திருவிழா மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனையடுத்து, ஒவ்வொரு நாளும் சந்திரசூடேஷ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிலையில், இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் மாசி மாதம் நடைப்பெறும் ஓசூர் மலைக்கோயில் திருவிழாவில் தமிழகம்,கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மரகதாம்பிகை அம்மன் ஒரு தேரிலும், சந்திரசூடேஸ்வரர், விநாயகர் ஆகியோர் தனித்தனி தேர்களில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது 'அரோகரா' என்று விண்ணை பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.
தேரானது நான்கு முக்கிய வீதிகளில் சுற்றி வலம் வந்தது. தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் உப்பு, பழம், மிளகு போன்றவற்றை சாமியின் மீது எரிந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு ஓசூர் நகரம் முழுவதும் அன்னதானம், மோர், பழரசங்கள் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுன.
ஓசூர் தேர் திருவிழாவிற்காக, 4 வட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஓசூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஓசூர் சார் ஆட்சியர் செல்வி பிரியங்கா, மாநகர ஆணையாளர் சினேகா, ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
ஓசூர் கோயில் திருவிழாவில் அசாம்பாவிதங்களை தவிர்க்க கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை தலைமையில் மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல்நிலையங்களை சேர்ந்த போலீசார், ஊர்க்காவல் படையினர் என 500-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.