சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தி கோட்' திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வந்தபோதே நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அன்றைய தினத்தில் இருந்தே அவரது நகர்வுகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. ஒரு புறம் தான் திட்டமிட்டிருந்த படங்களிலும், மறுபுறம் கட்சியின் செயல்பாடுகளிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார்.
குறிப்பாக, இரண்டு கோடி உறுப்பினர்கள் இலக்கு, தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமிப்பது, கட்சியின் கொடி, முதல் மாநில மாநாடு ஆகிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார்.
அடுத்த கட்ட நகர்வாக த.வெ.க மாநாடு பணிகளுக்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்த கட்சியாக அங்கீகரித்தது. அதுமட்டுமின்றி மாநாடு நடத்துவதற்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதியும் அளித்துள்ளது.
இதையும் படிங்க : த.வெ.க. மாநாடு தேதியை இன்று அறிவிக்கிறார் விஜய்? - TVK MAANAADU
அந்த வகையில், இன்று (செப்.12) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, அடுத்த மாதம் 15ம் தேதி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி பெறுவதற்கு நாளை தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் விக்கிரவாண்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நந்தக்குமாரை நேரில் சந்தித்து கடிதம் வழங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் இன்று மாநாடு தேதியை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநாடு தேதி அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் மாநாடு எப்போது என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.