திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக திமுகவைச் சேர்ந்த பூங்கோதை இருந்து வருகிறார். துணைத் தலைவராக, திமுக ஒன்றியச் செயலாளரான மாரி வண்ணமுத்து இருந்து வருகிறார்.
இந்நிலையில் திடீரென பூங்கோதை தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தன்னை உடனடியாக பதவியில் இருந்து விடுவிக்கக் கோரியும், மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 18 ஆம் தேதி கடிதம் கொடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், துணைத் தலைவர் மாரி வண்ணமுத்து தனக்கு பல்வேறு இடையூறு கொடுத்து வருவதாகவும், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பூங்கோதையிடம், மாரி வண்ணமுத்து சாதிய தீண்டாமை கடைபிடித்ததாகவும், அதனாலயே ராஜினாமா செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து விசாரித்தபோது, இதற்கு முந்தைய தேர்தல் வரை பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் பொது தொகுதியாக இருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது தான் தனி தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
பொது தொகுதியாக இருந்தவரை மாரி வண்ணமுத்து மற்றும் அவரது மனைவி இருவரும் தான் மாறி, மாறி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி வகித்து வந்துள்ளனர். தனி தொகுதியாக மாற்றப்பட்டதால் மாரி வண்ணமுத்து தான் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பூங்கோதைக்கு தலைவர் பதவி கிடைக்க உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : "கமிஷனர் அங்கிள்! தெரு நாங்கள் விளையாடவா, நாய்க்காகவா? பயமா இருக்கு" .. சிறுவர்கள் மனு!
எனவே, மாரி வண்ணமுத்து பூங்கோதையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மறைமுகமாக தலைவராக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றுவதில் கையெழுத்து போடுவது உட்பட பல்வேறு விஷயங்களில் மாரி வண்ணமுத்துவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் பூங்கோதை மாரி வண்ணமுத்துவின் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட தொடங்கியுள்ளார். அதன் காரணமாகவே, இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் தான், சமீபத்தில் மாரி வண்ணமுத்து ஆட்கள் பூங்கோதை வீட்டிற்கு நேரில் சென்று அவரை மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனவே, தான் பூங்கோதை தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதே சமயம் தற்போது வரை பூங்கோதையின் ராஜினாமா கடிதம் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, "ஏற்கனவே இரண்டு முறை ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். பேரூராட்சி தலைவர் பூங்கோதை வெளியூரில் வசிப்பதாகவும் அவர் பேரூராட்சிக்கு முறையாக வருவதில்லை எனவும் துணைத்தலைவர் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல் தலைவியின் கணவர் தலையீடு நிர்வாகத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர். அதே சமயம், துணை தலைவர் இடையூறு செய்வதாக தலைவி தரப்பில் கூறுகின்றனர். எனவே, இரண்டு முறை இருதரப்பையும் சமாதானம் செய்தோம். தற்போது மீண்டும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில், அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். தற்போது வரை ராஜினாமா கடிதம் குறித்து எந்த முடிவு எடுக்கவில்லை" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்