சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஆர்வமுடன் கேட்டறிந்தார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்கள் வீட்டில் ஆர்வத்துடன் உருவாக்கும் புதிய கண்டுபிடிப்புக்கான முயற்சியை பெற்றோர்கள் யாரும் தடுக்க வேண்டாம். கண்டுபிடிப்புகள் வாயிலாக சமூகத்திற்கு என்ன கிடைக்கும் என மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல, பங்குபெற வேண்டுமென நினைக்கும்போதே மாணவர்களாகிய நீங்கள் வென்றுவிட்டீர்கள் என்று உத்வேகப்படுத்திப் பேசினார்.
உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் நாங்கள்!
மேலும், பெரு நிறுவனங்கள் (Corporate companies), பெரிய திட்டங்கள் என்றில்லாமல், பொது ஜனம், கூலித்தொழிலாளி, கடை நிலை பொதுமக்களுக்கு சென்றடையும் படியாக மாணவர்களின் கண்டுபிடிப்புகள் திட்டங்கள் இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக அமைச்சர் கூறினார். நல்ல எதிர்காலத்தை நீங்கள் அமைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள்; எங்களைப் போன்றோர் இந்த மேடைகளில் அமர்ந்திருக்கிறோம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முதலீடுகள் உங்களை நம்பி தான் வருகிறது!
"வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆயுதம் இருக்கிறது, வலுவான ராணுவம் இருக்கிறது என்றெல்லாம் பார்த்து முதலீடு செய்வதற்கு வருவதில்லை. நல்ல மனித வளத்தை சார்ந்து தான், உங்களை நம்பி தான் வருகின்றனர். படிப்பு முக்கியம் தான். அதே நேரத்தில் உங்கள் தனித்திறனான யோசனைகள் மிக முக்கியம். யோசித்துக்கொண்டே இருங்கள்," என்றார் அன்பில் மகேஸ்.
இதையும் படிங்க |
தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தில் நீங்கள் கற்றுக் கொண்டதை இந்த சமூகத்திற்கு எப்படி திருப்பிக் கொடுக்கலாம் என்பதை நினைத்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், இந்த மாதிரியான நிகழ்ச்சி வாயிலாக உங்கள் கண்டுபிடிப்புகளை மக்களிடத்தில் கொண்டு சேருங்கள் இதை பார்க்கும் போது கிராமத்தில் இருக்கின்ற ஒரு குழந்தைக்கு அடுத்த ஆண்டு இந்த இடத்திற்கு வரவேண்டும் என எண்ணம் தோன்ற வேண்டும் எனப் பேசி தனது உரையை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முடித்து கொண்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்