சென்னை: குன்றத்தூரில் எலி மருந்திலிருந்து வெளியேறிய நெடியால் நவம்பர் 14ஆம் தேதி, வியாழக்கிழமை இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில், நேற்று (நவம்பர் 21) அவர்களது உடல் பிரேத பரிசோதனை செய்தபிறகு, அவர்களின் சொந்த கிராமமான கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்களின் உடல்களுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த சாய் சுதர்சனின் முதல் பிறந்தநாளான அன்றே, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எலி மருந்து மரணம்
சென்னை குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவித்ரா (31). இவர்களுக்கு வைஷ்ணவி (6), சாய் சுதர்சன் (1) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கிரிதரன் வீட்டில் எலித் தொல்லை இருந்ததால், பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தை அணுகி, வீட்டில் ஆங்காங்கே எலி மருந்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க: எலி மருந்தால் மரணித்த குழந்தைகள்! ஏசி காற்றில் விஷம் பரவியது எப்படி?
டொடர்ந்து, குழந்தைகளுடன் பவித்ரா மர்றும் கிரிதரன் படுக்கையறைக்குச் சென்று ஏசி போட்டுத் தூங்கியுள்ளார். ஆனால், நவம்பர் 14 ஆம் தேதி காலை அனைவருக்கும் மூச்சுத் திணறலும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட நான்கு பேரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிறுமி வைஷ்ணவி மற்றும் சிறுவன் சாய் சுதர்சன் உயிரிழந்துள்ளனர். பவித்திரா மற்றும் தந்தை கிரிதரன் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு
இச்சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த இரு குழந்தைகளின் உடலையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணையின் அடிப்படையில், வீட்டில் எலி மருந்து வைத்த ஊழியர், நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ‘இனி கஷ்டம் வந்தால் கள்ளச்சாராயம் குடித்தால் போதும் ரூ.10 லட்சம் கிடைக்கும்’ - சீமான்
தனியார் நிறுவன ஊழியர்களான தினகரன், சங்கர் தாஸ் ஆகிய இரண்டு பேரை குன்றத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். நிறுவன உரிமையாளர் பிரேம்குமாரை தேடி வருகின்றனர். எலி மருந்து நெடியால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமத்தை வேளாண் துறை ரத்து செய்தது.
சோகத்தில் திளைத்த ஊர்
இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டு வந்த பெற்றோர்களிடம், குழந்தைகளின் உடற்கூறாய்விற்கான படிவத்தில் அனுமதி பெற்றுள்ளனர். தொடர்ந்து, சிறப்பு மருத்துவக் குழுவினர் மற்றும் குன்றத்தூர் காவல்துறையினரின் முன்னிலையில் வீடியோ பதிவுடன் குழந்தைகள் இருவரின் உடற்கூராய்வு நடைபெற்றதாக காவல்துறை தகவல் தெரிவித்தது.
சென்னையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட இருவரது உடல்களும், நேற்று காலை அவர்களின் பூர்வீக கிராமமான கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் அக்ரஹாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த சாய் சுதர்சனின் முதல் பிறந்தநாளான நேற்றே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்ததியது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்