தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் குடிநீர் ஆதாரத்திற்கும் பாசனத்திற்கும் உள்ள மஞ்சளாறு மற்றும் சோத்துப்பாறை அணைகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 கன அடியை எட்டிய நிலை அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேறி வந்தது. அதேபோல் மஞ்சளாறு அணையின் நீர்மட்டமும் 51 அடியை எட்டிய நிலையில், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.
இதனிடையே, நேற்று பிற்பகல் முதல் மஞ்சளாறு அணை மற்றும் சோத்துப்பாறை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில், மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 33 கனஅடியில் இருந்து 176 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 52.10 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியவுடன் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியவுடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமலுக்கு வந்தது சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு! - Toll Gate Price Increase