திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே உள்ள பற்பநாதபுரத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் ஐயப்பன் என்ற சுரேஷ், கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வேலைக்குச் சென்று திரும்பும்போது, அவரைச் சுற்றி வளைத்த மர்ம கும்பல் ஒன்று, சுரேஷை வெட்டி படுகொலை செய்து விட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இது தொடர்பாக செய்துங்கநல்லூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், கொலை நடந்த அதே நாளில், தூத்துக்குடியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய முயன்றபோது காவல்துறையிடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த கார்த்திக் பாண்டியன், முத்துவேல் உள்ளிட்ட ஆறு பேர் காவல்துறையினரிடம் சிக்கினர். அவர்களை விசாரித்தபோது, தாங்கள் ஏற்கனவே இரண்டு கொலைகளை செய்துவிட்டு மூன்றாவதாக கருப்பசாமியைக் கொலை செய்ய வந்ததாகவும், அப்போது காவல்துறையிடம் பிடிபட்டதாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தொடர்ந்து விசாரித்தபோது, கார்த்திக் பாண்டியனின் புல்லட் பைக்கை எடுத்துச் சென்ற பாபு செல்வம், அதனைத் திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் முன் விரோதம் இருந்துந்துள்ளது. இதன் காரணமாக, பாபு செல்வம் என்பவரை நேற்று (பிப்.10) காலை, ரெட்டியார்பட்டி மலை இருக்கும் காட்டுப்ப குதிக்கு அழைத்துச் சென்று, கார்த்திக் பாண்டியன் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்துவிட்டு, செய்துங்கநல்லூருக்கு வந்து ஐயப்பன் என்ற சுரேசையும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
காவல்துறையிடம் பிடிபட்ட ஆறு பேர் கொண்ட கும்பலில் ஒருவருக்கு, சுரேஷுடன் முன்விரோதம் இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, தன் நண்பர்களுடன் சேர்ந்து ஐயப்பனை நல்லூர் பகுதியில் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து, தூத்துக்குடி பகுதிக்குச் சென்று, கருப்பசாமி என்பவரை கொலை செய்ய திட்டமிட்ட வேளையில், இந்த தகவல் அவருக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது.
இதனையடுத்து, அவர் காவல்துறையினரிடம் தன்னை கொலை செய்ய திருநெல்வேலியில் இருந்து ஆறு பேர் கொண்ட கும்பல் வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, கருப்பசாமியை கொலை செய்ய விடாமல் தடுத்ததோடு, இரண்டு கொலைகளை செய்த ஆறு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையைத் தொடர்ந்து அன்பு, சிவபெருமாள், கார்த்திக் பாண்டியன், முத்துவேல் உள்ளிட்ட ஆறு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து முனையம்; 2வது நாளாக தொடர்ந்த போராட்டம்.. கூடுதல் பேருந்துகள் இயக்கியதாக அரசு விளக்கம்!