வேலூர்: பாஜக சார்பில் வேலூர் மக்களவை தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 10) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் அகில இந்திய துணைத் தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "உலகத்தின் மிகச்சிறந்த வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், கலாச்சாரத்துக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளார்.
பல நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றிருக்கும்போது, தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், திருக்குறளை மேற்கோள்காட்டி, அதன் பிறகுதான் தன்னுடைய உரையைத் தொடங்குவார். அந்த அளவுக்கு அவர் தமிழ் மொழிக்கும், தமிழகத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி நிதி வழங்கி உள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது செங்கோலை அடையாளமாக வைத்தார். இது தமிழகத்தின் முக்கியத்துவத்தை குறிக்கிறது.
ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல அமைச்சர்கள் ஊழலில் சிக்கி உள்ளனர். ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை பிளவுபடுத்தும் வகையில் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போதைப் பொருட்கள் கடத்தலை ஊக்குவித்து வருகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், மாநிலச் செயலர் கோ.வெங்கடேசன், மாவட்டத் தலைவர்கள் மனோகரன் (வேலூர்), வாசுதேவன் (திருப்பத்தூர்), மாவட்ட பொதுச் செயலர்கள் ஜெகநாதன், பாபு, மகேஷ், தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கும்பகோண மாநகராட்சியில் ஒரே நாளில் 250 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள்.. எப்படி சாத்தியமானது?