தேனி: அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளும், பண்டிகை அன்றும், பண்டிகைக்கு மறுநாளும் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி சிவசேனா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
தீபாவளி தினத்தன்று மதுக்கடைகளை திறந்து வைப்பதால் மது பிரியர்கள் குடித்துவிட்டு வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குடும்பங்களில் பிரச்சினை ஏற்படுவதாகவும் இதனை தடுக்கும் விதமாக தீபாவளி பண்டிகையின் போதும், அதற்கு முந்தைய நாளும், பிந்தைய நாளும் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என சிவசேனா கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: 'தமிழகத்தில் குறுநில மன்னர்களைப் போல ஆட்சி செய்து வருகிறார்கள்'.. திமுகவை சாடிய முன்னாள் அமைச்சர் வளர்மதி..!
மேலும் குடித்துவிட்டு வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அல்லது படுகாயம் ஏற்படும் அபாயம் இருப்பதை உணர்த்தும் விதமாக சிவசேனா நிர்வாகி கை மற்றும் தலையில் விபத்தில் காயம் ஏற்பட்டது போன்று கட்டு போட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இதன் பின் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். கையில் கட்டுடன் வந்த சிவசேனா கட்சியின் நிர்வாகியால் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் ரவிசந்திரன், “வரும் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டிருந்தால், மது பிரியர்கள் மது அருந்தி வாகனங்கள் ஓட்டி, விபத்துக்கு உள்ளாக நேரிடலாம். இதனால் அவர்களின் குடும்பம் பாதிக்கப்படும். எனவே தீபாவளி, அதன் முன் தினம், மறுதினம் என மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட என்று சிவசேனா கட்சியினர் கோரிக்கை வைக்கிறோம்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்