வேலூர்: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களிடையே கொள்கை மற்றும் நம்பிக்கை அடிப்படையில் பிரதானமாக இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை, ஷியா மற்றும் சன்னி என்றழைக்கப்படுகிறது. இரு பிரிவினர்களும் முஹர்ரம் என்பதை முக்கிய பண்டிகளில் ஒன்றாக கருதுகின்றனர்.
அதாவது, இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் மொஹரம். சன்னி இஸ்லாமியர்கள் முஹர்ரம் பண்டிகையை புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். ஆனால், ஷியா இஸ்லாமியர்கள் நபிகள் நாயகம் அவரின் இரட்டை பேரன்களுள் ஒருவரான இமாம் ஹூசைன் கர்பலா யுத்தத்தில் கொல்லப்பட்டதை நினைவு கூறும் வகையில் துக்க நாளாக அனுசரிக்கின்றனர்.
இந்த நிலையில், வாணியம்பாடி உதயேந்திரத்தில் வசிக்கும் ஷியா இஸ்லாமியர்கள் இன்று (ஜூலை 17) முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு, குதிரையை ரத்தத்தால் அலங்காரம் செய்து, மக்கள் கருப்பு சட்டை அணிந்து தங்கள் மார்பில் அடித்தபடி, இமாம் ஹூசைன் குறித்த பாடல்கள் பாடியபடி வீதிகளில் ஊர்வலமாகச் சென்று துக்கத்தை அனுசரித்தனர்.
அதேபோல், வேலூரில் கருப்புச் சட்டை அணிந்து துக்க பாடல்களை பாடியபடி தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு, ரத்தம் சொட்டிய படி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். இதில் திரளான ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு துக்க தினத்தை அனுசரித்தனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலமாகச் சென்று மொஹர்ரம் பண்டிகையின் துக்க தினத்தை அனுசரித்தனர். அதேபோல், இந்தியாவில் காஷ்மீர், லக்னோ, டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் முஹர்ரம் ஊர்வலம் நடைபெற்றது. இதில், காஷ்மீரில் 1989ஆம் ஆண்டு முஹர்ரம் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் தடை நீக்கப்பட்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏர்வாடியில் இசையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!