சென்னை: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மேகதாது அணையைத் தடுத்து நிறுத்திடவும், ராசி மணல் அணை கட்டுமானத்தை தமிழ்நாடு அரசு துவங்கிட வேண்டும் என்ற ஒத்த கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் தமிழக விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் குழு இன்று நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.
கர்நாடகம் மேகதாட்டு அணை கட்டுமானத்திற்கு தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில்,அதனை தடுத்து நிறுத்தி கடலில் கலக்கும் உபரி நீரை இராசி மணலில் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் எடுத்த முன்னெடுப்பின்படி, தமிழ்நாடு அரசு புதிய அணைக்கட்ட வேண்டுமென தமிழ்நாடு அனைத்து விவசாய… pic.twitter.com/YH3AQKLpmI
— Selvaperunthagai K (@SPK_TNCC) September 3, 2024
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், "காவிரி நீர் உபரியாக கடலில் கலப்பதாகக் கூறி கர்நாடக அரசாங்கம் சட்டவிரோதமாக மேகதாது அணையைக் கட்டி தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நீரை தடுப்பதற்காக முயற்சி எடுக்கின்றனர்.
நாம் ராசிமணலில் அணை கட்டினால் 64 டிஎம்சி தண்ணீரை தேக்க முடியும் என்று திட்டமிட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. தற்போது தமிழ்நாடு தண்ணீரை கடலில் கலக்கச் செய்வதாக உண்மைக்கும், இயற்கைக்கும் புறம்பான மற்றும் நீதிக்கு எதிரான கருத்துக்களை கர்நாடக அரசாங்கம் முன்வைக்கின்றது.
எனவே, எங்களாலும் ராசிமணலில் காமராஜர் பெயரில் அணையைக் கட்ட முடியும் என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒத்த கருத்தை உருவாக்குகின்ற வகையில், அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகின்றோம். அதன் அடிப்படையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இதற்கு வாய்ப்பிருக்குமானால், எங்களது முழு ஆதரவையும் வழங்குகின்றோம் என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விசிக, பாமக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட இருக்கின்றோம். பின்னர், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து வலியுறுத்த இருக்கின்றோம். தமிழக முதலமைச்சர் வெளிநாடு இருந்து திரும்பிய பிறகு அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு செய்வோம். ஆதரவு திரட்டுவதற்காக அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்திக்க இருக்கின்றோம்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் குழு காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்து எங்களை நேரில் சந்தித்து ராசி மணல் பகுதியில் அணை கட்ட வேண்டும். 64 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலக்கின்றது. அந்த அணையைக் கட்டினால் கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் இந்த நீரை பயன்படுத்த முடியும் என்று ஒரு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கும் இது சாதகமாக அமையும். இதுதொடர்பாக முதலமைச்சருடன் கலந்து பேசி, இதன் சாதக, பாதகங்களை விவரித்து உடனடியாக இதனை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும்.
புதிதாக ஏதாவது தமிழ்நாட்டுக்குச் செய்தால், குறை சொல்வதை எதிர்க்கட்சிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். சென்னையில் குறிப்பாக, இந்தியாவில் நடக்காத தென்னிந்தியாவில் ஒரு கார் பந்தயத்தை நடத்தி இருக்கின்றார்கள். இது வரவேற்கத்தக்க ஒன்று. ஊக்குவிக்கப்பட வேண்டியவை" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : "காலியாக உள்ள மருத்துவக் கல்லூரிகளில் விரைவில் டீன் நியமனம்" - தமிழக சுகாதாரத்துறை தகவல்! - MEDICAL COLLEGE DEAN