ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புதுக்குய்யனூர் வனப்பகுதியில், நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, தாயுடன் இருந்த 3 வயதுடைய குட்டி யானை அதன் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் வெயில் காரணமாகக் கடுமையான வறட்சி நிலவுவதால், காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி காட்டை விடுத்து வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) காலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி காப்புக்காடு புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, வனப்பகுதியில் 45 வயதுள்ள பெண் யானை உடல் நலம் குன்றிய நிலையில் படுத்துக் கிடந்ததையும், அதனருகே 3 வயதுள்ள குட்டி யானை இருப்பதையும் கண்டு, வனக்கால்நடை மருத்துவக் குழுவுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக்குழுவினர், பெண் யானைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் யானை உயிரிழந்தததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உயிரிழந்த பெண் யானையின் உடல் அதே இடத்தில் உடற்கூராய்வு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பெண் யானையுடன் இருந்த 3 வயதேயான பெண் யானைக் குட்டியை மீட்டு, காலை முதலே பராமரித்து வந்த வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, நேற்று மாலை யானைக் குட்டி அதன் யானைக் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த குட்டி யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், பண்ணாரிசாலையில் யானைக் கூட்டத்துடன் குட்டி யானை சாலையைக் கடந்து சென்றதை உறுதி செய்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநர் குலால் யோகேஷ் விலாஷ் கூறுகையில், "தற்போது குட்டி யானைக்கு 3 வயது என்பதால், இயல்பாகவே தீவனத்தை எடுத்து உண்கிறது. ஆகையால், நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாய் யானையின் கூட்டத்திலேயே யானைக் குட்டியை சேர்த்துவிட்டோம். மேலும், தற்போது அந்த யானைக் கூட்டத்துடன் குட்டி இருப்பதையும் உறுதி செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வரட்டி சாணத்தால் தாக்கும் விநோத திருவிழா.. ஆந்திராவில் உகாதியை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்! - Ugadi 2024