சென்னை: மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை மாநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பெயரில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிபடைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் பல்வேறு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் சென்னை அசோக் நகர் பகுதியில் சிலர் போதை பொருள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வடபழனி தனிப்படை காவல்துறையினர், ரவீந்திரநாத் மற்றும் அசோக் நகரைச் சேர்ந்த காவலர் ஜேம்ஸ் ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடம் சோதனை செய்தபோது சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 கிராம் மெத்தபெட்டமைன் போதைபொருள் இருந்தது தெரியவந்தது.
அதிரடி விசாரணை
இதையடுத்து இருவரையும் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டபோது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆனந்தன், சபீர் ஆகியோருக்கு இந்த போதை பொருள் விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க |
அதனடிப்படையில் ஆனந்தன் மற்றும் சபீர் ஆகிய இரண்டு காவலர்களையும் வடபழனி தனிபடை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை செய்தனர். விசாரணையில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவலரான ஆனந்தன், பெங்களூரில் தங்கியிருக்கும் நைஜீரிய நாட்டு நபர்களிடம் தொடர்பு வைத்துள்ளது அம்பலமானது.
காவலர்கள் செய்த மோசடிகள்
மேலும், அவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதை பொருளை சென்னைக்கு வாங்கி வந்து, அதனை மற்றொரு காவலர் சபீருடன் இணைந்து ஆன்லைன் செயலி வாயிலாக அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்துவிட்டு, பின்பு இவர்களே “நாங்கள் காவலர்கள்” எனக் கூறி கடத்தல்காரர்களிடம் பணம் பறித்துள்ளனர்.
அதாவது, கடத்தல்காரர்களிடம் போதைப் பொருள் இருப்பதை அறிந்துவைத்துக் கொண்டு, உங்களை கைது செய்யாமல் இருக்க பணம் தர வேண்டும் என மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு மோசடி செய்து 50 லட்சம் ரூபாய் வரை ஈட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் மேலும் இரண்டு காவலர்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால், அவர்களையும் போதை தடுப்புக் காவல்துறை தீவிராமாக தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.