புது டெல்லி: தெற்கு டெல்லியில் இன்று காலை வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் மகளை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பியுள்ள சம்பவம் அப்பகுதியில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் ராஜேஷ் தன்வார் (55) என்பவர் மனைவி கோமல் (47), மகள் கவிதா (23) மற்றும் மகன் ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை 5 மணி அளவில் நடைபயிற்சிக்கு சென்ற மகன் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் தந்தை, தாய் மற்றும் சகோதரி மூவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்துள்ளனர். அதை கண்டு பேரதிர்ச்சி அடைந்த மகன் வெளியே வந்து கதறியுள்ளார். பின்னர் அப்பகுதி மக்கள் ஓடி வந்து பார்த்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவம் அறிந்து வந்த டெல்லி போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி காவல்துறை கூறுகையில், இந்த வழக்கு பல கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த வீட்டுக்கு தடயவியல் துறையினர் வருகை தந்து கூடுதல் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்'' என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தெலங்கானா மாநிலத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
கொலை சம்பவம் குறித்து அப்பகுதியில் இருப்பவர், தெருவில் உள்ள மூன்று பேரை யாரோ கொன்று விட்டதாக எங்களுக்குத் தெரிய வந்தது. இறந்தவர்களின் மகன் நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பதை பார்த்துள்ளார். போலீசார் இங்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்'' எனக்கூறினார்.
இதேபோன்ற மூன்று கொலைகள்
2022 ஆம் ஆண்டில், மேற்கு டெல்லியின் ஹரி நகர் பகுதியில் ஒரு திருமணமான தம்பதியும் அவர்களது வீட்டு வேலைக்காரரும் அவர்களது வீட்டிற்குள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், தம்பதியரின் சிறு மகள் ஹாலில் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். அவளை கொலையாளிகள் எதுவும் செய்யவில்லை. அந்த சம்பவம் அப்போது மேற்கு டெல்லியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதேபோல, 2018 ஆம் ஆண்டு தெற்கு டெல்லியின் வசந்த் குஞ்சில்19 வயதான பொறியியல் மாணவர், தனது படிப்பில் கவனம் செலுத்துமாறு கண்டித்ததற்காக பெற்றோர் மற்றும் தங்கையைக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.