சேலம்: வீராணம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், நேற்று அட்சய திருதியையை ஒட்டி, அவரது கடையில் தங்கத் தட்டு வடை செட்டுகளை விற்பனை செய்தார். இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் வாங்கி ருசித்தனர். மேலும், இந்த தட்டு வடை செட் மீது வைக்கப்படும் தங்க பேப்பர் உண்ணக்கூடியது தான் என கடை உரிமையாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அட்சய திருதியை நாளன்று தங்க தட்டுவடை செட் விற்பனை செய்த கடையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், “சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மண்டலம் TVK மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு தட்டுவடை கடையில் 24 கேரட் தங்கத்தில் தட்டு வடை வழங்கப்படும் என்று செய்யப்பட்ட விளம்பரத்தை தொடர்ந்து அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கடையில் தங்க நிறத்திலான கோல்ட் பாயில் பேப்பர் கொண்டு தட்டு வடை செட்டின் மேல் வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அவ்வாறு பயன்படுத்தப்படும் கோல்டு பாயில் மீது உணவுத்தரக் குறியீடுகள் ஏதும் இல்லாததால், அவை மனித உணவிற்கு ஏற்றதா என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், மேற்படி கோல்ட் பாயில் பேப்பரை, சட்ட ரீதியாக உணவு மாதிரியா என எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆய்வு முடிவின் அடிப்படையில், மேற்கண்ட தட்டு வடை செட் கடை உரிமையாளரின் மீது உணவு பாதுகாப்புச் சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சம்பந்தமான புகார்களுக்கு tnfoodsafety consumer App, unavupukar.fsda@tn.gov.in, WhatsApp No. 9444042322, Consumer Grivence Complaint. fssai.gov.in, dofssaslm@gmail.com போன்றவற்றின் மூலம் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.