கும்பகோணம்: மன்னார்குடியில் உள்ள கல்லூரியில் பயின்று வந்த 17 வயது மாணவி மற்றும் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் கல்லூரி 17 வயது மாணவர் இருவரும், கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (புதன்கிழமை) அறை எடுத்து தங்கி இருந்த நிலையில், மாணவி அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து, இச்சம்பவத்தை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, மாணவியுடன் தங்கியிருந்த கல்லூரி மாணவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், உறவினர்களான இருவரும் கோயில் செல்ல கும்பகோணம் வந்தபோது, பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட்டதால் குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக் கொள்ள அறை எடுத்துத் தங்கியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மாணவியின் மரணத்தில் மாணவர் மட்டுமில்லாமல், கூடுதல் நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்பதாகவும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், மேலும் இவர்களுக்கு அறை அளித்த விடுதி நிர்வாகத்தினர் மீதும் வழக்கு தொடர வேண்டும் என்றும் மாணவியின் உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், இது போன்ற சம்பவம் இனி நடக்காத விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த மாணவியின் உறவினர்கள், முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இச்சம்பவம் குறித்த விசாரணை நடைபெற வேண்டும் என கூறினர். மேலும், நடவடிக்கை எடுக்கும் வரை உடலை பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே, இன்று (வியாழக்கிழமை) நண்பகல் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல், இவ்வழக்கில் உடற்கூறாய்வு காட்சி பதிவு ஆகியவற்றுக்காக, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஓயோ லாட்ஜில் மைனர் பெண் மர்ம மரணம்.. உடன் தங்கிய கல்லூரி மாணவர் அளித்த பகீர் தகவல்.. கும்பகோணத்தில் நடந்தது என்ன?