திருநெல்வெலி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த வடக்குப்புதூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் முருகன் (37). இவர் கடந்த மார்ச் 8ஆம் தேதி, அச்சம்பட்டி பகுதியில் கோயிலுக்கு சுற்றுப்பயணம் செல்லும் மக்களை ஏற்றிக் கொண்டு, முப்பிடாதியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அப்பகுதியில் வந்த ஆட்டோ மீது வேன் மோதியுள்ளது. அப்போது, அங்கு போக்குவரத்துப் பணியில் இருந்த போலீசார் முருகனை தாக்கியதாகவும், அதில் ஓட்டுநர் முருகன் மயக்கம் அடைந்தாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர், முருகனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதன் பின்னர், உயிரிழந்த முருகனின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், போலீசார் அடித்ததில் தான் முருகன் இறந்துவிட்டதாகக் கூறிய அவரது உறவினர்கள், உரிய நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மறுத்து வந்தனர்.
மேலும், உறவினர்களுக்கு ஆதரவாக சில தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டுநர் முருகனின் மர்மமான மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள கடந்த 18 நாட்களாக உறவினர் உட்பட ஏராளமானவர்கள் போராடி வந்தனர். குறிப்பாக, போராட்டத்தின் போது கல்வீச்சு சம்பவம் நடந்ததால் சங்கரன்கோவில் பகுதியில் பரப்பான சூழல் நிலவியது.
இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், ஓட்டுநர் முருகன் மரணமடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதனிடையே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு குறித்த அறிக்கையை திங்கட்கிழமை சமர்ப்பிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஓட்டுநரின் முருகனின் உடலைப் பெற்றுக் கொண்டு, இறுதி சடங்குகளை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
குறிப்பாக, இறுதிச் சடங்குகளில் அரசியல் மற்றும் சாதி அமைப்புகள் ரீதியான தலையீடுகள் இல்லாமல் நடத்த வேண்டும் எனவும் முருகனின் உறவினர்களுக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. இதனை அடுத்து, 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முருகனின் உறவினர்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த முருகனின் உடலை, போலீசார் முன்னிலையில் முறைப்படி பெற்றுக் கொண்டனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்ற இரண்டு பெண்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை - சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு