புதுச்சேரி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், புதுச்சேரியில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக இருக்கும் சிட்டிங் எம்பி வைத்திலிங்கம் மீண்டும் களம் காண்கிறார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 31) காலை ரெயின்போ நகர் மற்றும் வெங்கட்டா நகர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசமி மற்றும் கூட்டணி கட்சியினருடன் திறந்த வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். அபோது, திடீரென வைத்திலிங்கம் மயக்கமடைந்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் வைத்திலிங்கத்தை மீட்டு, ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சையளித்தனர். அரைமணி நேரத்திற்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய வைத்திலிங்கம் மீண்டும் பரப்புரைக்கு புறப்பட்டார்.