திருநெல்வேலி: தமிழகத்தின் 38வது நாடாளுமன்றத் தொகுதியான திருநெல்வேலி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலப்பரப்பையும் கொண்டது. இந்த தொகுதியில் திருநெல்வேலி, ஆலங்குளம், பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு, பாபநாசம், மணிமுத்தாறு, இருட்டுக்கடை அல்வா, புவிசார் குறியீடு பெற்ற பத்தமடை பாய், கூடங்குளம் அணுமின் நிலையம், ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளம், மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ உந்தும வளாகம், பாளையங்கோட்டை மத்திய சிறை போன்றவை தொகுதியின் அடையாளமாக உள்ளன. தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படும் அளவிற்கு பல்வேறு கல்வி நிறுவனங்களைக் கொண்டிருந்தாலும் படித்த மாணவர்கள் வேலைக்காக வெளியிடத்திற்கு செல்ல வேண்டிய அவலநிலை தான் இங்குள்ளது என வருத்தம் தெரிவிக்கின்றனர் தொகுதி மக்கள்.
தொகுதி நிலவரம்: திருநெல்வேலி தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஐந்து தொகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்திலும் ஆலங்குளம் தொகுதி தென்காசி மாவட்டத்திலும் அமைந்துள்ளது. திருநெல்வேலி தொகுதியில் 16 லட்சத்து 42 ஆயிரத்து 305 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 293 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 39 ஆயிரத்து 863 பெண் வாக்காளர்களும், 149 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இங்கு ஆண்களை விட 37 ஆயிரத்து 570 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
1952ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதி உருவான நிலையில் 2009ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைக்கப்பட்டது. 1952ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை 17 தேர்தல்களைக் கண்ட இந்த தொகுதியில் அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம், அம்பாசமுத்திரம் தொகுதிகளை அதிமுகவும், பாளையங்கோட்டை, ராதாபுரம் தொகுதிகளை திமுகவும், நாங்குநேரியை காங்கிரஸ் கட்சியும், திருநெல்வேலி தொகுதியை அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவும் வென்றது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ஞானதிரவியம், இரண்டாம் இடம் பெற்ற அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை விட 1 லட்சத்து 85 ஆயிரத்து 720 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
தொழிலதிபர் ஞானதிரவியம்: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள ஆவரைகுளம் தான் எம்பி ஞானதிரவியத்தின் சொந்த ஊர். பணகுடி மற்றும் ராதாபுரம் சுற்றுவட்டாரத்தில் எம்பிக்கு கல்குவாரிகள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், காற்றாலை, ஓட்டல் போன்ற தொழில்களும் இவர் கைவசம் உள்ளது.
திமுகவில் ஆரம்பத்தில் கிளை செயலாளர், ஒன்றிய செயலாளர் ஆக இருந்து யூனியன் சேர்மன் ஆகும் அளவுக்கு வளர்ந்தார். ஆங்கிலத்தில் மிகப் பெரிய புலமை இல்லாவிட்டாலும் ஹிந்தி பேசக்கூடியவர் என்பதாலும், தொழிலதிபர் என்பதாலும் தொகுதியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பார்லிமெண்ட் பெர்பாமென்ஸ்: நாடாளுமன்றத்தில் கலந்து கொள்வதில் 63% வருகையை உறுதி செய்த அவர் தனி நபர் மசோதா எதுவும் கொண்டு வரவில்லை. 251 கேள்விகளை எழுப்பியுள்ள இவர், தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 25 விவாதங்களிலும் பங்கேற்றுப் பேசியுள்ளார்.
தொழில் நிலவரம்: திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமாக விவசாயத்தை நம்பியே உள்ளனர். நெல், வாழை, சிறுதானியங்கள், காய்கறிகள், பூக்கள் என பல்வேறு விவசாய பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. பத்தமடை பாய், கல்லிடைக்குறிச்சி அப்பளம், காருக்குறிச்சி மண்பாண்டம் போன்றவை புகழ்பெற்ற தொழிலாகவும் அதே சமயம் பாரம்பரிய தொழிலாகவும் இருக்கிறது.
விவசாயத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நீர் மேம்பாட்டுத் திட்டங்கள் தேவைப்படுகிறது. குறிப்பாகத் தாமிரபரணி ஆறு மூலம் மாவட்டத்தின் சில பகுதிகள் ஆண்டுதோறும் செழிப்பைச் சந்தித்தாலும் நதிநீர் பங்கீடு சரிவிகிதமாக இல்லாததால் களக்காடு, கங்கணாங்குளம், திசையன்விளை, ராதாபுரம் போன்ற பகுதிகள் வறட்சியாகவே உள்ளன. எனவே, மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய இரு அணைகளையும் இணைத்து வறண்ட பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று விவசாயத்தைக் காக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கத் தொழில் நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும். மானூர், ராதாபுரம் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு பூக்கள் பயிரிடும் நிலையில் அங்கு பூச்சந்தை அமைக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அம்பாசமுத்திரம் சொப்பு சாமான்கள் (மர கடைசல்கள்) உலகப் புகழ்பெற்ற தொழிலாக இருந்தும் கூட அதை மேம்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் மத்திய மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அம்பாசமுத்திரம் மரக்கடைசல் பொருட்களின் மதிப்பை உயர்த்த புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.
எம்பி ஞானதிரவியம் அளித்த வாக்குறுதி: தாமிரபரணி நதியைத் தூய்மைப்படுத்துவதற்குச் சிறப்புத் திட்டம். களக்காடு வாழை விவசாயிகளுக்குத் தனி விற்பனை சந்தை. கலைஞரின் கனவு திட்டமான நாங்குநேரி உயர் தொழில் நுட்ப பூங்கா பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள். தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு திட்டத்தை விரைவுபடுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வருவேன். புதிய ரயில் திட்டங்களைத் திருநெல்வேலி தொகுதிக்கு கொண்டு வருவேன். கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் IT துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். குலவணிகர்புரம் பகுதியில் புதிய மேம்பாலம் அமைத்து தருவேன் என்பன இவர் அளித்த முக்கிய வாக்குறுதிகளாகப் பார்க்கப்படுகிறது.
நிறைவேற்றியவை: வந்தே பாரத் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகள் திருநெல்வேலிக்கு வந்திருக்கிறது. மதுரை வரை இயக்கப்பட இருந்த வந்தே பாரத் நெல்லை வரை இயக்கப்படுகிறது. இதனைக் கன்னியாகுமரி வரை நீட்டிக்கக் கோரிக்கை விடுத்துள்ளார். தாழையூத்து பகுதியில் நான்கு வழி சாலையில் மக்கள் சாலையைக் கடக்க சுரங்கப்பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் கேடிசி நகர் பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை அரசு எடுத்து இருக்கிறது.
10க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய பேருந்து நிறுத்தங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார். 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் திருநெல்வேலி ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளும் துவங்கி உள்ளது. கடற்கரை கிராமமான கூத்தங்குழியில் புதிய லைட் ஹவுஸ் அமைத்துக் கொடுத்துள்ளார்.
வாக்குறுதிகளாகவே நீடிப்பவை: தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துவேன் எனக் கூறிய நிலையில், தாமிரபரணியில் கழிவுகள் கலப்பது தற்போது வரை நீடித்து வருகிறது. நாங்குநேரி உயர் தொழில்நுட்ப பூங்காவில் கூடுதல் தொழிற்சாலைகள் கொண்டு எனக்கூறிய நிலையில், அங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த தொழிற்சாலைகளும் முழுமையாக அங்கிருந்து வெளியேறியுள்ளது. ஜல்லிக்கல், எம் சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் ஆயிரக்கணக்கான லாரிகளில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவது தடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பொய்களைச் சொல்லி ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்: முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சவுந்தரராஜன் பேசுகையில், "திமுக எப்படி 500க்கும் மேற்பட்ட பொய்களை மக்களிடத்தில் சொல்லி இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்களோ அதுபோல தான் ஞானதிரவியமும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தாமிரபரணியைச் சுத்தப்படுத்துவது, குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம் என அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. திமுக அரசு கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விட்டோம் என்று திருநெல்வேலி மக்கள் குமுறிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டுகின்ற நபர் தான் திருநெல்வேலி தொகுதியில் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு தான், நலத்திட்டம் இல்லை: எம்பியின் செயல்பாடுகள் குறித்து பேசிய வழக்கறிஞரும், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவருமான அன்பு அங்கப்பன், “எம்பி ஞானதிரவியம் அவர் சார்பாகவும், கட்சி சார்பாகவும் பல வாக்குறுதிகளைத் திருநெல்வேலி தொகுதிக்கு அளித்திருந்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அவரைப் பார்ப்பதே சிரமமானதாக இருந்தது. மத்திய அரசிடம் இருந்து தொகுதிக்கு நிதியைப் பெற்றுத் தரும் வலுவான உறுப்பினராக இவர் செயல்பட்டதில்லை.
இந்த எம்பி மாவட்ட ஆட்சித் தலைவரை மிரட்டியதாகச் செய்தி வந்திருக்கும், குண்டர்களை வைத்து பாதிரியாரைத் தாக்கியதாகச் செய்தி வந்திருக்கும். அவரது லாரிகள் கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி என்றதாகச் செய்தி வந்திருக்கும். ஆனால் மக்களுக்காக நலத்திட்டங்களைச் செய்ததாகச் செய்திகளில் காண முடியாது” என்றார்.
சொன்னதைச் செய்யவில்லை: நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் சத்யாவிடம் கேட்டபோது, “எம்பி ஞானதிரவியம் கடந்த 2019 தேர்தலின் போது, நீட் தேர்வை ரத்து செய்திடுவோம், சமையல் எரிவாயு விலை குறைத்திடுவோம், விவசாய கடன் முழுவதும் ரத்து செய்திடுவோம், மீனவர் நலன் காக்க தனி அமைச்சகம் அமைப்போம் என பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தார். ஆனால் இந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. அதேபோல் தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தித் தருவதாக வாக்குறுதி வைத்து நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வைத்தார். ஆனால் தற்போதும் தாமிரபரணி ஆறு மாசடைந்து தான் காணப்படுகிறது.
மேலும், மாநகர மக்களின் முக்கிய பிரச்சனையான குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம் அமைத்துத் தருவதாக எம்பி ஞானதிரவியம் உறுதியளித்தார். தற்போது வரை அந்த பாலம் கட்டப்படவில்லை. இதுபோன்று கொடுத்த எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை” எனத் தெரிவித்தார்.
மாநகராட்சி என்றாலும் கிராமம் தான்: நாங்குநேரியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர், “மாநகருக்கு அருகில் இருந்த போதிலும் பெரிதளவில் வேலைவாய்ப்பு இல்லை. மாநகராட்சியாக இருந்தபோதிலும் ஒரு கிராமம் போலத் தான் திருநெல்வேலி இருக்கின்றது. பெண்கள் வாழ்க்கையை முன்னேற்றக்கூடிய அளவிற்கு எந்த தொழிலும் இங்கு இல்லை. பெண்களுக்குப் பீடி சுற்றுவது, ஜவுளி கடைகளுக்கு வேலைக்குச் செல்வது போன்ற வாய்ப்புகள் தான் உள்ளது. சென்னை போன்ற இடங்களில் உள்ளது போல ஐடி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களைக் கொண்டு வர வேண்டும். வறட்சியாலும், வெள்ளத்தாலும் எங்கள் வாழ்க்கை நிலை மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுவிட்டது” எனத் தெரிவித்தார்.
ரயில்வே மேம்பாலம்: முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பால்குமார், “எம்பி ஞானதிரவியம் ஓரளவிற்கு நல்லது செய்துள்ளார். குலவணிகர்புரம் ரயில்வே கிராசிங்கில் பெரும்பாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அடுத்து எம்பியாக யார் வந்தாலும் அம்பாசமுத்திரம் சாலை, நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் குலவணிகர்புரத்தில் பாலம் அமைத்துதர வேண்டும்” என்றார்.
போதையால் பெருகும் குற்றங்கள்: பாளையங்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வேல்முருகன், “இந்த தொகுதியில் படித்த இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. மது, கஞ்சா போன்ற போதைப்பழங்கங்களால் இங்கு குற்றங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதில் இருந்து இளைஞர்களை மீட்கும் வகையில் அவர்களை நல்வழிப்படுத்தி அவர்கள் வாழ்வாதாரத்திற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
சந்திப்பு ரயில் நிலையம் குறித்து சிந்திக்க வேண்டும்: பெருமாள்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் டெனிஸ் முத்துகுமார், “மாநகராட்சி பகுதிகளிலேயே தண்ணீர் பிரச்சினை உள்ளதென்றால் மற்ற பகுதிகளிலெல்லாம் தண்ணீர் பிரச்சனை எந்தளவிற்கு இருக்கும். அதிக வருவாய் ஈட்டும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் எந்த மேம்பாடும் இல்லை. எந்த எம்பி வந்தாலும் ரயில் நிலைய மேம்பாட்டிற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
தொகுதியிலேயே வசிக்கும் எம்பி நான் தான்: இதுகுறித்து எம்பி ஞானதிரவியத்தை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “திருநெல்வேலிக்கு 5 வருடத்தில் மொத்தம் 17 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. அதில் 20 நூலகம், பள்ளி கட்டடங்கள், குடிநீர் தொட்டிகள், ரேஷன் கடை, பேருந்து நிறுத்தம் போன்றவற்றின் கட்டுமான பணிகளுக்கு அந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
தியாகராஜ நகர் ரயில்வே மேம்பாலம் பணி முடிவடையவுள்ளது. குலவணிகர் புரம் பகுதியில் Y வடிவில் மேம்பாலத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதற்கு செலவு அதிகமாகும் என்பதால் நேராக மட்டும் அமைக்க ஒப்புதல் அளித்து உள்ளனர். அந்த ரயில்வே மேம்பாலத்திற்கான நில ஆர்ஜித பணிகளுக்கான ஒப்புதலுக்காகத் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வருமானம் அதிகம் ஈட்டக்கூடிய திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை நவீனப்படுத்துவதற்காகவும் கோரிக்கை விடுத்துள்ளேன். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. தாமிரபரணியைச் சுத்தப்படுத்த வேண்டும் என எனது கன்னிப் பேச்சிலேயே தெரிவித்து இருந்தேன், அதற்கு மத்திய அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. கூடங்குளம் அணு கழிவைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது சம்பந்தமாகவும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன் அதற்கும் சரியான பதில் இல்லை.
தொகுதிக்காகப் பல கோரிக்கைகள் கொடுத்துள்ளேன் நிதி ஒதுக்குவது அவர்கள் கையில் தான் உள்ளது. கல்லிடைக்குறிச்சி, கடையம் ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்துள்ளேன். சன்சாத் கிராம் ஆதர்ஷ் யோஜனா திட்டத்தின் கீழ் வடக்கன்குளம் கிராமத்தைத் தத்தெடுத்து இருந்தேன் அதற்கு மத்திய அரசு ஏதும் நிதி வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.
தொகுதியில் வசிக்கும் எம்பி நான் தான். கிட்டத்தட்ட 300 கேன்சர் நோயாளிகளுக்குப் பிரதமரின் மருத்துவ உதவி திட்டத்திற்காகக் கையெழுத்திட்டு உள்ளேன். என் வீட்டில் ஒரு அலுவலகம் திருநெல்வேலியில் ஒரு அலுவலகம் வைத்துள்ளேன், என்னைப் பார்க்கமுடியவில்லை எனக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. பாபநாசம் - மணிமுத்தாறு இணைக்க கால்வாய் அமைக்க மத்தியில் பேசியுள்ளேன். எம்பியை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள்.
அதே போல் வந்தே பாரத் ரயில் சென்னை - கன்னியாகுமரி வரை இயக்கவேண்டும் என்று 2021ஆம் ஆண்டிலிருந்து நான் வலியுறுத்தியதின் பயனாக தற்போது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலியிலிருந்து, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாகத் தாம்பரம் வரை செல்லும் ரயிலை நான்தான் பெற்றுக் கொடுத்தேன். திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் ரயில் நிறுத்தம் வாங்கி கொடுத்துள்ளேன்” என தெரிவித்தார்.
களம் காண காத்திருப்பவர்கள்: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையிலேயே கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என எல்லாவற்றுக்கும் முன்னதாக திருநெல்வேலி நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகத்தை நயினார் நாகேந்திரன் திறந்தார். இதனால் பாஜக தரப்பில் திருநெல்வேலியில் இவர் களமிறங்குவார் என கூறப்படுகிறது.
திமுக: திருநெல்வேலியில் மீண்டும் போட்டியிட ஞானதிரவியம் தலைமை தலையசைவிற்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சபாநாயகர் அப்பாவு தன் மகன் அலெக்ஸ்-க்கு சீட் பெறுவதற்காகக் காய் நகர்த்தி வருவதாகவும், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா என பலரும் சீட் பெரும் முனைப்பில் உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கிசுகிசுக்கின்றனர். அதேநேரம் தலைமை திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிரகாம்பெல்க்கு வாய்ப்பு வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதிமுக: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை, முன்னாள் எம்பி சௌந்தரராஜன் உள்ளிட்டோர் சீட் பெரும் முனைப்பில் உள்ளனர்.
காங்கிரஸ்: திமுக கூட்டணியான காங்கிரசுக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்படும் என்ற பேச்சும் உள்ளது. அவ்வாறு காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால், முதலமைச்சர் ஸ்டாலினின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ளவரான பீட்டர் அல்போன்சுக்கு சீட் வழங்கப்படலாம் எனவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்எஸ் ராமசுப்பு, தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோரும் போட்டியில் உள்ளனர் எனவும் கதர் கட்சியினர் கூறுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி: ஏற்கனவே நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பணிகளைத் துவங்கிவிட்ட நிலையில் அவர்கள் கட்சித் தரப்பில் திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக பா.சத்யா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான சரத்குமார் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவதற்கான ஒத்திகையாக மாநாடு ஒன்றையும் நடத்திச் சென்று இருக்கிறார். திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சட்டமன்றங்களில் தொகுதி வாரியாக 2019ஆம் ஆண்டு தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளை விட 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளது.
திமுக வலுவான கூட்டணியோடு போட்டியிடும் நிலையில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளும் தனித்தனியாக களம் காண உள்ளனர். இதன் காரணமாகத் திருநெல்வேலி தொகுதியில் நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.