வேலூர்: ஏழாம் வகுப்பு மாணவரை தலைமை ஆசிரியர் தாக்கிய சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோர் சத்துவாச்சாரி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
வேலூர், சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் - உமா மகேஸ்வரி தம்பதி. இவர்களது மகன் ஸ்ரீ அக்ஷய்குமார் (13). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை 4:30 மணியளவில் மாணவரை அழைத்து வருவதற்கு பெற்றோர் சென்றுள்ளனர். அப்பொழுது மாணவர் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததால் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே, மாஸ்க்கை கழட்டி மாணவர் முகத்தை பார்த்துள்ளனர். இதில் மாணவரின் முகத்தில் காயம் இருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்கையில், முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, மாணவரிடம் கேட்டு நடந்தவற்றை தெரிந்துகொண்ட பெற்றோர், மாணவரை சிகிச்சைக்காக அரசு பென்ட்லண்ட் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து பெற்றோர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் கூறுகையில், “நேற்று பிரேயர் முடித்துவிட்டு போகையில் ஒன்றாம் வகுப்பு மாணவரை மாணவர் ஒருவர் தள்ளிவிட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதற்கு, என்னையும் சேர்த்து மூன்று மாணவர்களை தலைமை ஆசிரியர் சீனிவாசன் அழைத்தார். அங்கு சென்றவுடன் ஆசிரியர் எங்களை பிரம்பால் அடித்தார். என்னை அடிக்கும் பொழுது வாயில் பட்டு காயம் ஏற்பட்டது. எனக்கு காயம் ஏற்பட்டதால் ஐஸ் கியூப் வைத்து விட்டனர்” இவ்வாறு மாணவர் கூறினார்.
இது குறித்து மாணவரின் குடும்பத்தினர் கூறுகையில், “எனது மகனை அழைத்து வருவதற்காக பள்ளிக்குச் சென்ற நிலையில், முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தான். அவற்றை கழட்டி பார்த்தபோது முகத்தில் காயங்கள் இருந்தன. இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்ட போழுது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும், உன்னால் என்ன செய்ய முடியுமோ பார்த்துக்கொள் என்று கூறினார்.
இதனையடுத்து, அக்ஷய்குமாரிடம் கேட்ட பொழுது தலைமை ஆசிரியர் அடித்ததாக கூறினார். 11 மணிக்கு அடித்தவரை 4 மணிக்கு வரையில் பெற்றோர்களுக்கு இது குறித்து எந்த தகவலும் தெறிவிக்கவில்லை. மாணவரை மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லவில்லை. நாங்கள், இது குறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். இதுவரையில் போலீசார் எவரும் வரவில்லை” இவ்வாறு கூறினர். மாணவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவரை ஆசிரியர் தாக்கிய சம்பவம் குறித்து, பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் சங்கர் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் கூறுகையில், “மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியர் சீனிவாசனிடன் இச்சம்பவம் குறித்து விளக்கக் கடிதம் கேட்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: காமராஜர் கைகாட்டிய இடம்.. ராசிமணல் பகுதியில் அணை கட்டினால் என்ன பயன்?