விருதுநகர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இராஜபாளையம் அருகே அயன் கொல்லம் கொண்டான் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு ஆரதவாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் குருசாமியின் மகன் சுரேஷ், பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால், அதிமுகவைச் சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர், சுரேஷை எதிர்த்து கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுந்தரலிங்கத்தை தாக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, சுந்தரலிங்கத்தின் தம்பி ரவிச்சந்திரன் என்பவர், சுரேஷை தடுக்கச் சென்ற நிலையில், அவருக்கு வலது கையில் வெட்டு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, வெட்டுப்பட்ட ரவிச்சந்திரனை அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் உடனடியாக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில், வேட்பாளர் முன்பாக அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் இரு கட்சியினரிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சேத்தூர் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சுரேஷை தேடி வருகின்றனர். பிரச்சாரத்தில் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவிச்சந்திரனை, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று ஆறுதல் கூறினார். ரவிச்சந்திரன் அதிமுகவில் சிறுபான்மை பிரிவு பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவிச்சந்திரன் கூறுகையில், “அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது திமுகவைச் சேர்ந்த நபர் மது போதையில், வேட்பாளரை வண்டியிலிருந்து இறங்கி கீழே வந்து பேசும்படி அழைத்தார். அப்போது அவரை நாங்கள் அமைதியாக இருக்கும்படி கேட்டோம். இதனால் ஆத்திரமடைந்த அவர், எனது அண்ணனை தாக்க வந்தார். இதனால் நான் தடுக்கச் சென்ற நிலையில் என்னை தாக்கினார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.. திருச்சி ரோடு ஷோவில் ஜெ.பி.நட்டா பேச்சு - JP NADDA ROAD SHOW