திருவள்ளூர்: சென்னையின் புறநகர பகுதிகளுள் ஒன்றான ஆவடியில் இன்று (ஜூன் 30) ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வை ஆவடி காவல் ஆணையரகம், நாசரேத் கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் பல வகையான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைகளும், நடனப் பிரியர்களை ஈர்க்கும் வகையில் பரதநாட்டியம் நடத்தப்பட்டது. சிறுவர் சிறுமியர்களைக் கவரும் வண்ணம் மாட்டு வண்டி, குதிரை வண்டி பயணம். இளைஞர்கள் ஆர்வம் காட்டும் வகையில் கூடைப்பந்து, இறகு பந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.
ஹேப்பி ஸ்ட்ரீட்க்கே உரிய DJ அமைப்பும் இடம் பெற்றிருந்தது. அதில் இசைக்கப்பட்ட திரை இசை பாடல்களுக்கு பொதுமக்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரும் உற்சாகமாக கலந்துகொண்டு நடனத்தின் மூலம் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாக நிகழ்ச்சியின் விருந்தினர், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் சிலம்பம் சுற்றியும், குதிரை வண்டி, மாட்டு வண்டியில் பயணம் செய்தார். மேலும், ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் பறை இசைக் கருவியை இசைத்து அதற்கேற்ப நடனமாடியும் இளைஞர்களுடன் இறகு பந்து விளையாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மனச்சோர்வை நீக்கியுள்ளது என்றும், பல நாட்களுக்கு பின் சிரித்து, மகிழ்ந்து நடனமாடியது உற்சாகத்தை தந்துள்ளது எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த நிகழ்வுக்காக இன்று அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யபட்டது. நிகழ்வில் அசம்பாவிதம் எதும் ஏற்படாமல் இருக்க நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளருக்கு ஏலக்காய் மாலை.. சேர்மன் இருக்கையில் அமர வைத்து கெளரவிப்பு!