சென்னை: சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சிறுவர் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில், "சென்னையில் போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) மூலம் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கோயம்பேடு சுற்றியுள்ள சில பகுதிகளில் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நெற்குன்றம், TDN நகர், எஸ்டேட் குட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது, அங்கு 6 நபர்கள் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, போலீசார் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹரிஸ், விஜயகுமார், அஜய், கோகுல், மாணிக்கம், ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், 17 வயது சிறார் ஒருவரும் பிடிபட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, அவர்களிடமிருந்து 2,450 டைடல் மற்றும் 300 நைட்ரவிட் என மொத்தம் 2,750 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில், கைது செய்யப்பட்ட ஹரிஸ் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், இவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 5 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 17 வயது இளஞ்சிறார், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை..சென்னையில் ஒடிசா தம்பதி கைது! - பின்னணி என்ன?