கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். ஹைதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் பேராசிரியர்.மூர்த்தி பட்டமளிப்பு விழாவின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், "மாணவர்கள் தாங்கள் கற்கும் கல்வியையும், பார்க்கும் வேலையையும் ஆர்வத்துடன் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். 'விக்சித் பாரத்' எனும் இலக்கை அடைய புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு கல்வி நிறுவனங்களின் சார்பில் உரிய ஊக்கங்கள் வழங்கப்பட வேண்டும். தேசத்தின் வளர்ச்சிக்கு அறிவியல், பொறியியல் என அனைத்து துறைகளின் வளர்ச்சியும் அவசியமானதாகும். தேசமே முதன்மை என்ற எண்ணத்தை பெற்றோர்கள் விதைக்க வேண்டும். தேசத்தின் வளர்ச்சியே முதன்மையானது என்பதை இளைஞர்கள் மனதில் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
Join us live for the 39th Annual Convocation of the Bharathiar University, Coimbatore, where Hon'ble Governor-Chancellor Thiru R. N. Ravi confers degrees and medals on the graduating students. Prof. Dr. B. S. Murty, Director, Indian Institute of Technology Hyderabad, is the Chief…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 14, 2024
பட்டமளிப்பு விழாவில் 1,622 முனைவர் பட்ட ஆய்வாளர்களும், முதுகலை மற்றும் இளநிலைப் பட்டங்களில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 298 மாணவர்களும் பட்டங்களை, தங்கப் பதக்கங்களை நேரடியாக பெற்றனர். இப்பட்டமளிப்பு விழாவின் வாயிலாக 1,17,233 இளநிலை பட்டப்படிப்பு, 42,312 முதுகலை பட்டப்படிப்பு, 279 இளமுனைவர், 1,172 முதுகலை பட்டயப்படிப்பு என மொத்தம் 1,62,618 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற்றபோது புகார் மனு அளித்தார். இதனால், விழா மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு எதிராக பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அவர்களிடம் மனு கொடுத்தற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் புகார் கொடுத்து உள்ளேன்.
இதையும் படிங்க : திருவள்ளூர் பல்கலை. 19வது பட்டமளிப்பு விழா.. 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம்!
பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆய்வாளர்களை வழி நடத்தும் பேராசிரியர்கள், அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களது குழந்தையைப் பார்ப்பதற்கும், பாத்திரம் கழுவவும், வங்கி வேலைக்கும் ஆய்வு மாணவர்களை பயன்படுத்துவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.
பல்கலைக்கழக வளாகத்தில் ஆதிதிராடவிடர் வகுப்பை சார்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு இரண்டு விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகளை பொது விடுதியாக பயன்படுத்துகின்றனர். ஆதிதிராவிடர் விடுதிகளே இல்லை என கூறி, அரசு தரும் நிதியை வாங்குவதில்லை.
ஆராய்ச்சி மாணாவர்களின் ஆய்வுக் கட்டுரையை சமர்பித்த பின்பும் ரூ.50,000 - 1,00,000 வரை பணம் செலவழிக்க சொல்லி பேராசிரியர்கள் வற்புறுத்துகின்றனர். இது எல்லா பல்கலைக்கழகத்திலும் நடைமுறையில் இருக்கிறது. இதை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறேன்.
பல்கலைக்கழக விடுதி பராமரிப்புக்காக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். ஆனால் கம்பர் விடுதியில் கழிவறை சரியாக கட்டப்படவில்லை. சேக்கிழார் விடுதியிலும் முறையாக பராமரிப்பதில்லை என்கிற போது ஒரு கோடி ரூபாய் எங்கே போகிறது என்கிற கேள்வியையும் புகாரில் எழுப்பி உள்ளதாக தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் மணவர்கள் விளையாடுவதற்கு இரண்டு மைதானங்கள் இருந்தும் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. வார விடுமுறை நாட்களில் தனியாருக்கு இரண்டு மைதானங்களையும் வாடகைக்கு விடுகின்றனர். கடந்த 5 வருடங்களாக விளையாட்டு தினம் நடத்தாமல் பணத்தை மட்டும் வசூலித்து வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், பட்டமளிப்பு விழாவிற்கு பின்பு , பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார். விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். அமைச்சர் கோவி.செழியனுடன் கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்