திருப்பூர்: திருப்பூரில் தார் சாலை அமைக்கும் பணி 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், 9 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலை அமைக்கும் பணியைத் தொடங்கக் கோரி பொதுமக்கள் மாநகராட்சி மண்டல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி, 59வது வார்டுக்கு உட்பட்ட பூந்தோட்டம், வள்ளலார் அவென்யூ உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில் 100க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், முத்தனம் பாளையம் - விஜயாபுரம் இணைப்பு சாலை போடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக டெண்டர் விடப்பட்டது.
டெண்டர் விடப்பட்டு 2 மாதங்கள் கடந்த நிலையில், சாலை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் இருந்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள், பணிக்குச் செல்லும் பொதுமக்கள் என ஏராளமானோர் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்திற்குச் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக காலம் தாழ்த்தாமல் தார் சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர், கையில் பதாகைகளை ஏந்தியவாறு மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் மண்டல அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மே 1 தொழிலாளர் தினம்; உயிராக மதிக்கும் தொழிலாளர்களுக்கு 'மே தின வாழ்த்துகள்' - முதலமைச்சர் ஸ்டாலின் - CM Stalin May Day Wishes