தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம், ஆதனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அப்போது அவர்கள் தங்கள் பகுதிக்கு மதுக்கடை அமைத்து தர வேண்டும் என்றும், தங்கள் ஊரில் இருந்து மது கடைக்கு தருமபுரி மதுக்கடைக்கு 24 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி இருப்பதாகவும், பென்னாகரம் ஜக்கம்பட்டி கிராமத்தில் உள்ள மதுக்கடைக்கு 20 கிலோமீட்டர் செல்ல வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர். எனவே, ஊர்ப் பகுதியில் ஒரு அரசு மதுபான கடை அமைத்து உதவும் படி கேட்டுக்கொள்வதாக மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய பெண் ஒருவர், "தங்கள் கிராமத்தைச் சேர்ந்த மது குடிப்பவர்கள் 15 முதல் 20 கிலோமீட்டர் தொலைவில் சென்று மது குடிப்பதால் அவர்கள் எப்போது வீட்டிற்கு வருவார்கள் என்பதே தெரியவில்லை. இதனால் அவர்களைத் தேடி நாங்கள் செல்ல வேண்டி உள்ளது.
எங்கள் பகுதியிலேயே மது கடை அமைத்தால் அவர்கள் எங்காவது இருந்தால் அவர்களை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்து விடுவோம். தூரத்தில் இருப்பதால் எங்களால் அவர்களை கண்டுபிடித்து மீட்டு வருவதில் சிரமமாக இருக்கிறது" என்றார்.
மற்றொரு நபர் பேசும்போது, "மதுக்கடைக்கு சென்று வரும்பொழுது போலீசார் மதுபோதையில் வாகனம் இயக்குதல் வழக்குப்பதிவு செய்வதாகவும், மேலும் சென்று வருவதற்கு இரண்டு மணி நேரம் வரை நேரம் வீணாவதால் கால்நடைகளை பராமரிப்பது உள்ளிட்ட வேலைகள் தடைபடுவதாகவும் கூறினர்.
மேலும், வெளியூர் சென்று மது அருந்த முடியாதவா்வா்கள் உள்ளூர் சந்து கடைகளில் அதிக விலை கொடுத்து மது அருந்தும் நிலை உள்ளதாகவும் எனவே தங்கள் பகுதிக்கு மதுக்கடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை" வைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தீக்குழியில் தவறி விழுந்து சிறுவன்; கும்மிடிப்பூண்டி தீமிதி திருவிழாவில் நடந்த சோகம்! - Accident in Temple function