கோயம்புத்தூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் தேசிய அளவிலான ஐந்தாவது குவான் கி டோ(Qwan ki do) சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 20 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு அவரகளது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 25 மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். அதில் கோவை மாவட்டத்தில் இருந்து ஏழு மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் ஆகியவற்றை வென்று சாதனை படைத்துள்ளனர். அதில் இரண்டு பேர் கோவை அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.
மேலும் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற மாணவர்கள் மொரோக்கோவில் ஏப்ரல் மாதம் உலக அளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய கோவை மாணவர்களுக்கும் பயிற்சியாளர் அமிர்தராஜ்க்கும் ரயில் நிலையத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இது குறித்து பேசிய அரசு பள்ளி மாணவி இன்ஷிகா, "கடந்த 9ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற குவான் கி டோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளோம். இதைத்தொடர்ந்து நாங்கள் உலகளவில் மொரோக்கோவில் நடக்கவிருக்கும் குவான் கி டோ போட்டியிலும் பங்கேற்க உள்ளோம். அதனால் எங்களுக்கு மொரோக்கோ செல்வதற்கு தமிழக அரசு எங்களுக்கு உதவி புரிய வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
இதையும் படிங்க: ஊரப்பாக்கம் பகுதிவாசிகளே உஷார்.. தப்பியோடிய அனுமன் குரங்குகளை பிடிக்கும் முயற்சியில் ஊழியர்கள்!