மதுரை: மதுரை சிம்மக்கல் பகுதியில் இன்று(ஏப்.4) தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாகத் தைக்கால் தெரு, சிம்மக்கல், காசி விஸ்வநாதர் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
பின்னர் பிரச்சார கூட்டத்தில் பேசிய அமைச்சர், "ஒரு அரசியல்வாதிக்கு அதாவது பொதுமக்கள் பணியில் உள்ளவருக்கு மனிதநேயம், பாசம், அன்பு இருக்க வேண்டும். பின்தங்கியவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி முன்னேற்ற வேண்டும். மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான செயல்திறனும் இருக்க வேண்டும். மனிதநேயமும் செயல்திறனும் தான் நல்ல அரசியல்வாதிக்கு அடையாளம்.
மகளிர் மற்றும் குழந்தைகளின் எதிர்கால நலன்களுக்கு திமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறது. எவ்வாறு பிரிவினையை உருவாக்கலாம், பணத்தைச் சுருட்டலாம், எப்படி அனைவரையும் அமுக்கி வைக்கலாம், மிரட்டலாம் என செயல்பட்டு வருகிறது.
தேர்தல் பத்திர ஊழல்: பாஜக அரசு தேர்தல் பத்திரம் என்ற கொடூரமான திட்டத்தைச் செயல்படுத்தி ஊழல் செய்து பணத்தைச் சுருட்டி உள்ளனர். ஊழல்வாதிகள் என மற்றவர்களைச் சொல்லத் தகுதியில்லாத அரசாங்கம் பாஜக. ஒட்டுமொத்த ஊழலின் அடையாளமாக பாஜக அரசு உள்ளது.
ஒத்துழைப்பு தராத தேர்தல் ஆணையரைத் தானாக ராஜினாமா செய்ய வைத்துக் கழட்டி விட்டனர். ஒத்துழைப்பு கொடுக்கும் நபர்களை புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கின்றனர். தேர்தல் ஆணையம் ஒரு நாடாளுமன்றத் தேர்தலை 3 மாதமாக நடத்துகிறது. எதற்காகக் காலதாமதம் செய்து நடத்துகிறார்கள். ஒன்று தேர்தல் ஆணையத்திடம் செயல்திறன் இல்லை அல்லது தேர்தலைத் தவறான காரணத்திற்காக இழுத்தடித்து நடத்துகிறார்கள்.
நாட்டை பிணமாக்கும் பாஜக: வரிப்பணத்தைச் சாமானிய மக்களிடம் இருந்து பறிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தினர். பாஜக அரசு இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் ஒருநாள் நீடித்தாலும் நமக்குத் தெரிந்த இந்திய நாட்டை பிணமாக்கி எரித்து விடுவார்கள்.
பணமும், அதிகாரமும் தான் முக்கியம் என பாஜக உள்ளது. மக்களுக்காக நடக்காத ஆட்சி பாஜக ஆட்சி. நாட்டையும், ஜனநாயகத்தையும், வாழ்க்கை முறையையும் காப்பாற்ற வேண்டுமென்றால் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். அப்போது தான் எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியும்.
ஊழலுக்கும், பாஜகவுக்கும் தொடர்பு: எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல் செய்கிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள் எனக் கூறியதோடு, வழக்குப்பதிவு செய்வோம், கைது செய்வோம் என சொன்னார்கள். தொடர்ந்து பாஜக 25 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆனால் வழக்கு தொடர்ந்த 25 பேரும் பாஜகவில் இணைந்துவிட்டதால் அவர்களை உத்தமர்கள் என பாஜக சொல்கிறது. அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பாஜகவில் இணைந்ததால் காணாமல் போய்விட்டது. 25 பேரும் உத்தமர்களே என மாநிலங்களவை, மக்களவை, மத்திய அமைச்சர் எனப் பதவிகளை பாஜக வாரிக் கொடுத்துள்ளது. ஊழலுக்கும், பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது" என பேசினார்.
இதையும் படிங்க: தேர்தலில் ஏஐ தொழில்நுட்ப ஆதிக்கம்: ஆதாயமா? அச்சுறுத்தலா? - AI IN ELECTION