மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கொற்றவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரி. இவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தொழிலதிபரான பாரி மற்றும் இமயமதி தம்பதியின் மகன் அஸ்வந்த். இவர் அமெரிக்காவில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பகுதி நேரமாக வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தை சேமித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வருகிற நவம்பர் மாதம் தனது தந்தை பாரியின் பிறந்தநாளை முன்னிட்டு, தன் தந்தை படித்த மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அஸ்வந்த் முடிவு செய்துள்ளார். அதன்படி, தந்தையின் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு பள்ளி விடுமுறைக்காக வந்த அஸ்வந்த், தான் வேலை பார்த்து சேமித்த பணத்தை எடுத்துக்கொண்டு, தாய் இமயமதியுடன் மயிலாடுதுறையில் அவரது தந்தை பாரி படித்த கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் அதில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதிலும், 1989ஆம் ஆண்டு தனது தந்தையுடன் கல்வி பயின்ற மாணவர்களை வரவழைத்து, அவர்கள் முன்னிலையில் 49 ஏழை, மாணவ மாணவிகளுக்கு மொத்தமாக ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கல்வி உதவித்தொகையாகவும், ரூ.25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பள்ளிப்பைகள் மற்றும் ரூ.23 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கு நவீன ஒலிபெருக்கியையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இருப்பினும், அவரது தந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பிடிக்காது என்பதாகக் கூறும் அஸ்வந்த், அவரது தந்தை அமெரிக்காவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 20 ஆயிரம் உதவித்தொகை: பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!