மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தமிழகத்தில் காவிரி கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய இப்பகுதிகளில், காவிரிநீர் மற்றும் பம்புசெட் நீரைக் கொண்டு விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக, அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், நாற்று நடுவது உள்ளிட்ட விவசாயப் பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால், இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். இதனைச் சமாளிக்க, இயந்திரங்கள் மூலம் நடவு மற்றும் அறுவடை செய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
சம்பா, தாளடி பருவத்தில் அடிக்கடி மழை பெய்யும் என்பதால், இயந்திரங்கள் மூலம் நடவு செய்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கரைந்து சேதம் அடைவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காக, பழமையான முறைப்படி பணிக்கும் ஆட்களை வைத்து நாற்றுப்பறித்து, நடவு செய்வதை விரும்புகின்றனர்.
மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்ற அதிக அளவிலான நபர்கள் சென்று விடுவதால், விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயப் பணிகளில் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க வடமாநிலத் தொழிலாளர்களை விவசாயிகள் களமிறக்கியுள்ளனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை அடுத்த நல்லத்துக்குடி பகுதியில், வடமாநிலத் தொழிலாளர்கள் நாற்று பறித்து, நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயி கவின் என்பவர் கூறுகையில், "உள்ளூரில் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இயந்திரங்கள் மூலம் நாற்று நடவு செய்யும் போது செலவுகள் அதிக அளவில் ஆகின்றன. இதனைச் சமாளிக்க கல்கத்தாவில் இருந்து விவசாயத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரத்து 600-க்குள் முடிந்து விடும். பணிகளும் எந்த குறையும் இல்லாமல் நடைபெறுகிறது.
மேலும், இப்படி வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு 4 ஏக்கர் வரை நடவு செய்கின்றனர். அவர்களுக்கு தேவையான அரிசியை மட்டும் வாங்கிக் கொடுத்தால் போதும், அவர்களே சமைத்து தங்கி பணிகளைச் சிறப்பான முறையில் முடித்து தருகின்றனர்" எனக் கூறினார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், நல்லத்துக்குடி கிராமத்தில் கல்கத்தாவைச் சேர்ந்த வடமாநில விவசாயத் தொழிலாளர்கள் நாற்று நடும் பாணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் களைப்பு தெரியாமல் இருக்க இந்தி மொழியில் பாடல்களைப் பாடி, உற்சாகத்துடன் நாற்று நடும் பணியில் ஈடுபட்டது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: நாகையில் 250 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட டச்சு தேவாலயம் மீண்டும் திறப்பு