சென்னை: சென்னை அருகே வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா (Arignar Anna Zoological Park) 1,490 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலோடு ஆசியாவிலே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய உயிரியல் பூங்காவாகும். அந்த வகையில், இந்த பூங்காவில் 2 ஆயிரத்து 382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நெருப்புக் கோழி, சருகு மான் மற்றும் கட்ட உடல் மலைப்பாம்பு போன்றவை இங்கு வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மேலும், இவ்வாறு இனப்பெருக்கம் செய்யப்படும் விலங்குகள் மற்றும் பறவைகள், விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் மூலம் மற்ற உயிரியல் பூங்காக்களுடன் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
இது குறித்து உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், "கடந்த 2023-ல் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கும், உத்திரபிரதேச கான்பூர் உயிரியல் பூங்காவிற்கும் இடையே, இந்திய மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பூங்கா விலங்குகளை பரிமாறிக்கொள்ள முன்மொழியப்பட்டது.
அதன்படி, ஐந்து மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிஃபோன் கழுகு, பத்து அனுமன் குரங்குகள் மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் என மொத்தம் நான்கு இனங்கள் கான்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்து ஜன. 28ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அவ்வாறு கான்பூரில் இருந்து சென்னைக்கு விலங்குகள் கொண்டுவரப்பட்ட பரிமாற்ற பயணத்தில் கான்பூர் உயிரியல் பூங்கா பணியாளர்கள், வனச்சரக அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர் மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால்நடை உதவி மருத்துவர் ஆகியோர் உடன் வந்தனர்.
விலங்குகள் பரிமாற்றத்தின் போது, எப்போதும் கொண்டுவரப்பட்ட விலங்குகள் கால்நடை உதவி மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு, தொடர்ந்து தற்காலிக அறையில் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னரே பூங்காவில் காட்சிப் பகுதிக்கு மாற்றப்படும். அந்த வகையில், கொண்டுவரப்பட்ட விலங்குகளின் உடல்நிலை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால்நடை உதவி மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு, தற்போது தனிமைப்படுத்தப்பட்ட தற்காலிக அறைகளில் வைக்கப்பட்டு உள்ளன.
மேலும், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு இரண்டு ஜோடி சருகு மான்கள், ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்புகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள், மூன்று நெருப்புக்கோழிகள் மற்றும் ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகிய விலங்குகள் திங்கட்கிழமை (ஜன.29) அனுப்பப்பட்டது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "திமுகவுக்கு 24 மணி நேர ஏடிஎம் அமைச்சர் எ.வ.வேலு" - திருவண்ணாமலையில் அண்ணாமலை விமர்சனம்!