மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது நவராத்திரி திருவிழாவாகும். அம்மன் சன்னதியிலுள்ள இரண்டாம் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் கொலு அமைக்கப்படும்.
நவராத்திரி விழாவின்போது ஒன்பது நாட்களும் அம்மனின் கொலு காட்சி இந்த மண்டபத்தில்தான் நடைபெறும். நவராத்திரி விழா என்பது இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என ஒவ்வொரு சக்திக்கும் மூன்று நாட்கள் என மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவாகும்.
இந்த விழா திருமலை நாயக்கர் காலத்தில் துவங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் அம்மன் பல்வேறு விதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருட்காட்சி தருவது வழக்கம். இந்நிலையில் முதல் நாளான இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் உடல்நலம் பெற வேண்டி திருவொற்றியூர் கோயிலில் மகள் சௌந்தர்யா பிரார்த்தனை!
- 2ஆம் நாள் (அக்.4) ஊஞ்சல் அலங்காரத்திலும்
- 3ஆம் நாள் (அக்.5) முத்தங்கி சேவை
- 4ஆம் நாள் (அக்.6) விறகு விற்ற லீலை
- 5ஆம் நாள் (அக்.7) சுந்தரர் அவதாரம்
- 6ஆம் நாள் (அக்.8) விநாயகர் ஜனனம்
- 7ஆம் நாள் (அக்.9) எல்லாம் வல்ல சித்தர் கோலம்
- 8ஆம் நாள் (அக்.10) மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம்
- 9ஆம் நாள் (அக்.11) சிவபூஜை என அம்மன் காட்சி அளிப்பார்.
- 10ஆம் நாள் மகிஷனை அம்மன் கொன்ற வெற்றி நாள்தான் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாணவ, மாணவியரின் 108 வீணை வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கொலு மண்டபத்தின் நவராத்திரி கொலுவைக் கண்டு களித்த பக்தர்கள், அம்மனின் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தையும் கண்டு அருளாசி பெற்றுச் சென்றனர். நவராத்திரி விழா நடைபெறும் 10 நாட்களும் பரதநாட்டியம், பக்தி இன்னிசை கச்சேரிகள் நடைபெறும் என மதுரை மீனாட்சி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்