திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நடத்தி வந்த பிபிடிசி தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் முடிவடைய இருப்பதால் தொழிலாளர்களுக்கு விருப்ப ஒய்வு கொடுத்து வெளியேற உத்தரவிட்டது. ஆனால், சுமார் நான்கு தலைமுறைகளாக அங்கு வசிக்கும் தொழிலாளர்கள் மலையை விட்டு வெளியேற விருப்பம் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தொழிலாளர்களை வெளியேற்ற நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை அதிகாரிகளாக தேசிய மனித உரிமை ஆணைய டிஎஸ்பி ரவி சிங் மற்றும் ஆய்வாளர் யோகேந்தர் குமார் திரிபாதி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் கடந்த இரண்டு தினங்களாக நெல்லையில் முகாமிட்டு மாஞ்சோலை பகுதிக்கு நேரடியாக சென்று, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீட்டில் அமர்ந்து இரவு வரை விசாரணை நடத்தினர்.
குறிப்பாக ஒரு கிமீ தூரம் மேடு பள்ளமான மலைப்பகுதியில் நடந்து சென்றபடி தொழிலாளர்களை சந்தித்ரனர். தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று காலை தேயிலை தோட்ட தனியார் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க: சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் டிஐஜி மீது வழக்கு.. சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிமன்றம்!
அதற்காக தேயிலை தோட்ட தனியார் நிறுவன அதிகாரிகள் சுமார் ஆறு பேர் மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் தற்போது மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகம் வந்து நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டமாக இரு தரப்பிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என தெரிகிறது. அதன் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.