தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்.19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு, மார்ச் 20ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதிவரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த வாரம் மாநிலம் முழுவதும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.
ஆனால், வேட்புமனு தொடங்கிய முதல் நாள் பலரும் மனுத் தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. அந்த வகையில், முதல் மூன்று நாட்களில் மொத்தமாக 78 வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், நேற்று (மார்ச் 25) ஒரே நாளில் மட்டும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தமாக 405 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளையுடன் (மார்ச் 27) வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறவுள்ள நிலையில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஹிமாயூன் கபீர், கடந்த இரண்டு நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த சூழலில், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஹிமாயூன் கபீர், மருத்துவமனையில் இருந்து மருத்துவரின் முறையான ஆலோசனை மற்றும் அனுமதியும் பெற்று, இன்று (மார்ச் 26) வேட்புமனுத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தும் அலுவலரும், தஞ்சை மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப்பிடம், ஹிமாயூன் கபீர் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
இதற்கு முன்னதாக வேட்பாளர் ஹிமாயூன் கபீரின் உடல்நிலை குறித்துக கேட்டபோது, "வெற்றி வாய்ப்பில் ஒரு இந்தியா, ஒரு நாடு, ஒரே மொழி, ஒரே வரி ஆகிய கொள்கை கோட்பாடுகளை ஏற்றுக்கொள்கிற கட்சிகளுக்கு எதிர்ப்பு நிலையில் எங்களது கட்சி உள்ளது. ஆகவே, எல்லா நிலையிலும் எங்களது கட்சியை முடக்கப் பார்க்கின்றனர். எனது உடல்நிலையை விட, நாட்டின் சூழ்நிலை மிக மோசமாக உள்ளது. ஆகவே, உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் செல்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வேட்புமனுத் தாக்கல்!