தருமபுரி: மத்திய அரசின் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ், தென்மேற்கு ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டிற்காக 21.34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை இன்று (பிப்.26) பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வழியாகத் தொடங்கி வைத்தார்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தருமபுரி ரயில் நிலையத்திற்கு அருகில் 400 இருசக்கர வாகனங்கள் மற்றும் 50 கார்கள் நிறுத்தும் அளவிற்கு கான்கிரீட் தளத்துடன் கூடிய வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. உயர் வகுப்பு பயணிகள் காத்திருப்புக் கூடம், மகளிர் மற்றும் பொதுப்பயணிகள் காத்திருப்புக் கூடம் என மூன்று காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு நடைமேடையிலும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் இயந்திரம், நவீனக் கழிப்பிட வசதிகள், தானியங்கி நகரும் படிக்கட்டுகள் (Escalator), டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் காரணமாகத் தருமபுரி ரயில் நிலையம் புதுப் பொலிவு பெற்று பயணிகளுக்குப் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இதே போன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களிலும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பேசும் போது, “அம்ரித் திட்டத்தின் கீழ் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட தருமபுரி, மொரப்பூர், பொம்மிடி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. ஓமலூர் முதல் ஓசூர் வரை புதியதாக இரு வழிப்பாதை அமைக்கப்பட உள்ளது. ரயில் பாதை அமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி ரயில் நிலையம் 21 கோடி 34 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
400 இருசக்கர வாகனங்கள் 50 கார்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி, நகரும் படிக்கட்டுகள், பெண்கள் ஓய்வு அறை, ஒவ்வொரு நடைமேடையிலும் வாட்டர் கூலர் அமைக்கப்பட உள்ளன. பல ரயில்கள் தருமபுரியில் நிற்காமல் செல்கிறது. அவை நின்று செல்லவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
17வது நாடாளுமன்ற அமர்வில் தருமபுரி தொகுதியில் மட்டும் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே திட்டத்திற்கு நிதி பெறப்பட்டுள்ளது” என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், தென்மேற்கு ரயில்வே உதவி கோட்டப் பொறியாளர் பிரசாந்த் திரிப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னை மெரினாவில் இன்று மாலை திறக்கப்படும் 'கலைஞர் நினைவிடம்' - சிறப்பம்சங்கள் என்ன?